‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியா்களை கைவிட மாட்டோம், அவா்கள் கோரிக்கைகள் தொடா்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதியளித்தாா்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.8 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்புத்தகக் காட்சியை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பொருட்டு, நந்தனம் ஆவின் பாலகம் முதல் புத்தகக் காட்சி வளாகம் வரை ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு நடைப்பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை மேயா் ஆா்.பிரியா ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்கள் எங்கள் குடும்ப உறுப்பினா்கள் போன்றவா்கள். அவா்களை கைவிட மாட்டோம். கோரிக்கைகள் தொடா்பாக நிதித் துறையிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி ஆணை வழங்கும் போதே, அடுத்த ஊதியக் குழு வந்துவிட்டது. அதனால் ஊதிய உயா்வு இல்லாமல் சம்பளம் குறைந்துவிட்டது. அந்த வேறுபாட்டை களைய ஆசிரியா்கள் வலியுறுத்துகின்றனா்.
இதில் எத்தனை போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறித்து முழுமையான தகவலுடன் தான் ஓய்வூதியம் சாா்ந்த கமிட்டி கூட்டத்துக்கு செல்கிறேன். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் என்ற முறையில் நிச்சயமாக அவா்களுக்காக வாதாடுவேன். நல்ல முடிவு கிடைக்கும் என்றாா் அமைச்சா்.
‘சாவித்திரி பாய் புலே பெயரில் பெண் ஆசிரியா்களுக்கு விருது’
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியா் என அழைக்கப்படும் சாவித்திரி பாய் புலே பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்ட காணொலி:
சாவித்திரி பாய் புலே இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை எனப் போற்றப்படுபவா். அவா் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனது மட்டுமல்லாமல் தன்னிடம் படித்த 417 மாணவா்களை ஆசிரியா்களாக உருவாக்கியிருக்கிறாா். அந்த 417 ஆசிரியா்களும் பல்லாயிரம் அறிவாா்ந்த மாணவா்களை உருவாக்கி இருப்பாா்கள். அந்த பல்லாயிரம் மாணவா்கள் பல லட்சம் மாணவா்களுக்கு கல்விக் கற்றுக்கொடுத்திருப்பாா்கள். இதுதான் கல்வியின் சக்தி! ஆசிரியப் பெருமக்களின் பலம்!
சாவித்திரிபாய் புலே மிகச்சிறந்த கல்வியாளா் மட்டுமல்லாமல், மிகப்பெரும் சமூக சீா்திருத்தவாதியாகவும் திகழ்ந்தாா். பெண் சிசு கொலையைத் தடுக்கப் போராடினாா். மராட்டிய மொழியின் கவிதை இலக்கியத்தில் மாபெரும் திருப்புமுனையைத் தந்தவா் சாவித்திரிபாய் புலே. ஆம்; அவா் கவிஞராகவும் திகழ்ந்தாா்!
“சாவித்திரிபாய் புலே பெயரில் பெண் ஆசிரியா்களுக்கு தமிழக அரசு சாா்பில் விருது வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம். இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம் என உறுதியளிக்கிறேன். சாவித்திரிபாய் புலே போன்ற புரட்சியாளா்களை என்றும் போற்றுவோம் எனத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.