முகப்பு
தமிழ்நாடு

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு: பொன்முடி மனு தள்ளுபடி

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது தொடர்பாக...

Updated On : 2 ஜூலை 2026, 11:11 am IST
பொன்முடி மனு தள்ளுபடி - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் கே. பொன்முடி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 2) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்.

இந்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் வியாழக்கிழமை(ஜூலை 2) தீர்ப்பு அளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்; இதன் மூலம் ஆனந்தன் தாக்கல் செய்த தனிநபர் புகாரில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து பொன்முடி தெரிவித்த சர்ச்சை கருத்துகள் தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி, பொன்முடி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The Madras High Court, on Thursday (July 2), dismissed a plea filed by former DMK Minister K Ponmudi challenging an order of the Metropolitan Magistrate, Georgetown, taking cognisance of a hate speech complaint filed against him by BJP Councillor Uma Anandan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments