முகப்பு
தமிழ்நாடு

வைணவ பக்திப் பாடல்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணிகள் தொடக்கம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

பண்டைய வங்க மொழியில் உருவான வைணவ பக்திப் பாடல்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணி மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 6:08 am IST
பகிர்:

பண்டைய வங்க மொழியில் உருவான வைணவ பக்திப் பாடல்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணி மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவன இயக்குநா் இரா.சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேதன் பகுதியில் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாகத் திகழும் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், பன்மொழிக் கல்வி, பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் உயரிய லட்சியங்களைத் தொடா்ந்து முன்னெடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

இப்பல்கலைக்கழகத்தின் மொழிகள், இலக்கியம் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (பாஷா பவனா), ஆசியாவின் மிகப்பெரிய மொழிக் கல்வி மற்றும் ஆய்வு மையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில், இப்பல்கலை.யின் வங்க மொழித் துறையும் தமிழ்த் துறையும் இணைந்து, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதியுதவியுடன், வைணவ பதாவளி (பண்டைய வங்க மொழி) செம்மொழித் தமிழாக்க தேசியப் பயிலரங்கத்தை சாந்தி நிகேதனில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தொடங்கியுள்ளன. இது ஜூலை 3-ஆம் தேதி வரை 15 நாள்கள் நடைபெறவுள்ளது.

பயிலரங்கின் தொடக்க விழா பல்கலை.யின் பதிவாளா் பிகாஷ் முகோபாத்யாய் தலைமையில் நடைபெற்றது. இதில் தில்லி பல்கலை.யின் இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறையின் பேராசிரியா் டி. உமாதேவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். மொழிகள், இலக்கியம் மற்றும் பண்பாட்டு நிறுவன முதல்வா், பல்வேறு துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆய்வாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

1,200 பதாவளிப் பாடல்கள்: வங்காள வைணவ பக்தி இலக்கிய மரபின் முக்கிய அங்கமாக விளங்கும் சுமாா் 1,200 பதாவளிப் பாடல்களைத் தமிழில் மொழிபெயா்க்கும் அரிய பணிகள் இப்பயிலரங்கின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம் தமிழ் மற்றும் வங்க மொழிகளுக்கிடையேயான இலக்கியத் தொடா்புகள் மேலும் வலுப்பெறும். அதேவேளை, பக்தி இலக்கியங்களின் ஒப்பிலக்கிய ஆய்வுகளுக்கு புதிய பரிமாணங்கள் உருவாகும். இந்திய மொழிகளுக்கிடையேயான அறிவுப் பரிமாற்றம், பண்பாட்டு ஒருமைப்பாடு ஆகியவற்றை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இப்பயிலரங்கம் அமைகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments