தவெக கூட்டணிக்கு விரைவில் குறைந்தபட்ச செயல் திட்டம்: தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு
தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகள் கூட்டத்தில், தவெக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகள் கூட்டத்தில், தவெக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்தக் கூட்டணியின் பெயர், குறைந்தபட்ச செயல் திட்டம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தோழமைக் கட்சிகளின் கூட்டத்துக்கு தவெக ஏற்பாடு செய்தது. சென்னை அடுத்த கோவளத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் தோழமைக் கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கூட்டத்தில், தவெக தலைமையில் புதிதாக கூட்டணி அமைப்பது குறித்தும், அக்கூட்டணியின் நடவடிக்கைகள் குறித்தும் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசித்தார்.
விரைவில் பெயர் அறிவிப்பு: கூட்டத்துக்குப் பிறகு தவெக தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: இக்கூட்டத்தில் அனைவருடைய கருத்துகளும் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்தக் கூட்டணியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு, குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்க வேண்டும். மேலும், கூட்டணிக்கான பெயர் உள்ளிட்ட மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இது ஒரு ஜனநாயகக் கூட்டணி. ஆகையால், அனைத்து விஷயங்களும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே, முடிவெடுக்கப்படும். தவெக சார்பில் மக்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும்போது, "இண்டி' கூட்டணியில் தவெக இணைவது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போது, தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து மட்டுமே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றனர்.
5 ஆண்டுகள் ஆட்சி தொடரும்: முதல்வர் விஜய் உறுதி
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று தோழமைக் கட்சித் தலைவர்களிடம் முதல்வர் ஜோசப் விஜய் உறுதி அளித்தார்.
மேலும், "எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது போல தவெக தலைமையிலான ஆட்சி 6 மாதங்களில் கலைந்துவிடாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சி நீடிக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.
ஊழலற்ற ஆட்சியை அளிப்போம். மதச்சார்பின்மையில் அனைவரும் உறுதியாக இருப்பதோடு, சமூக நீதி கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்' என முதல்வர் விஜய் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.