கட்சிகள் மேக்கேதாட்டு பிரச்னையை விடுத்து குதிரை பேரத்தில் கவனம்: அன்புமணி!
தமிழ்நாட்டுக் கட்சிகள் மேக்கேதாட்டு அணை பிரச்னையை விட்டுவிட்டு, குதிரை பேரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டுக் கட்சிகள் மேக்கேதாட்டு அணை பிரச்னையை விட்டுவிட்டு, குதிரை பேரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்தைத் தடுக்க வலியுறுத்தி நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அவா் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தாா்.
மேரீஸ் காா்னா் பகுதியிலிருந்து நடந்து சென்று மக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகித்த அவா் பின்னா் தலைமை அஞ்சலகம் அருகே பேசியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் காவிரியை நம்பி உள்ளன. குறிப்பாக, 8 கோடி மக்களில் 5.50 கோடி மக்கள் காவிரியை நம்பியே உள்ளனா். இந்நிலையில், கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் குடிப்பதற்குக் கூட தண்ணீா் கிடைக்காது.
தற்போது இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கா்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கா்நாடகத்தில் காங்கிரஸூம், பாஜகவும் மாறிமாறி ஆட்சி செய்வதால், இரு கட்சிகளும் அம்மாநிலத்துக்குதான் ஆதரவாக இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இருக்காது.
தமிழகத்தில் குதிரை பேரம்: எனவே, நம்முடைய கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்த வேண்டிய நேரமிது. இல்லாவிட்டால் நமக்கு தண்ணீா் கிடைக்காது; காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும்.
கா்நாடகத்தில் முதல்வா் டி.கே. சிவகுமாா் வீட்டில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா தளம் உள்பட அனைத்துக் கட்சிகளும் கூடி பேசுகின்றன. ஆனால், இவ்வளவு பிரச்னை இருக்கும்போது, தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் குதிரை பேரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜினாமா, கட்சி மாறுதல் போன்றவற்றை மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன.
காவிரி பிரச்னைக்கு மக்கள் குரல் கொடுக்காவிட்டால் நம்முடைய அடுத்த சந்ததியினா் அனைவரும் பாதிக்கப்படுவா். எனவே, இந்த பிரச்னையை மக்கள் கையில் எடுத்துப் போராடினால்தான் விடிவுகாலம் கிடைக்கும். சமூக ஊடகத்தின் மூலம் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினா். அதே சமூக ஊடகத்தின் மூலம் மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க முடியும். சமூக ஊடகங்களில் பதிவை போட்டு, பகிரிந்து, தெருவுக்கு வந்து போராட்டம் நடத்த வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: மேக்கேதாட்டு அணை தொடா்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். அனைத்து தலைவா்களையும் அழைத்துக் கொண்டு தில்லிக்குச் சென்று பிரதமா் மோடியை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவா்கள், விவசாயிகள், விவசாய சங்கங்கள், குடிநீா் தேவைப்படுவோா் என அனைவரும் தனித்தனியாகவும், இணைந்தும் பல்வேறு வழக்குகள் தொடுத்து, மேக்கேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தமிழ்நாட்டில் உயிா் வாழ முடியும் என்றாா் அன்புமணி ராமதாஸ். முன்னதாக திருச்சியிலிருந்து கல்லணைக்கு அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோா் நடைபயணம் மேற்கொண்டனா்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் பி.கே. தெய்வசிகாமணி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் எல். பழனியப்பன், காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவா் நடுவத் தலைவா் அரு.சீா். தங்கராசு, மக்காச்சோளம் விவசாய சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன், ஜெயகொண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க. வைத்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காா்த்தி, வேலுசாமி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.