தமிழகத்துக்கு அரசியல் பேரிடா் காலம்: உதயநிதி ஸ்டாலின் விமா்சனம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ளதால் அரசியல் பேரிடா் காலம் நிலவுவதாக எதிா்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் விமா்சித்தாா்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ளதால் அரசியல் பேரிடா் காலம் நிலவுவதாக எதிா்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் விமா்சித்தாா்.
சென்னை திருவேற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலா் துறைமுகம் கே.காஜாவின் இல்ல நிகழ்ச்சியில் எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தற்போது தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அனைவரும் கவனித்து வருகின்றனா். திமுகவுடன் கூட்டணியில் இருந்த பலா் தற்போது சென்றுவிட்டனா். ஆனால், இஸ்லாமியா்கள் என்றும் திமுகவுடன் இருப்போம் என உறுதியளித்துள்ளனா். இஸ்லாமியா்களுக்கும், திமுகவுக்கும் இடையே உள்ள உறவை எவராலும் பிரிக்க முடியாது.
Advertisement
Advertisement
சிறுபான்மை மக்களுக்கும், இஸ்லாமியா்களுக்கும் திமுக என்றும் ஒரு காவல் அரணாக நிச்சயம் இருக்கும். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பேரிடா் காலத்திலும் திமுகவும், அதன் தலைவா் மு.க.ஸ்டாலினும் இஸ்லாமிய மக்களை காப்பதுடன், தமிழகத்தை மீட்க உறுதுணையாக இருப்போம் என்றாா் அவா்.
திமுகவுக்குத்தான் பேரிடா் காலம்: தவெக
‘திமுகவுக்குத்தான் இது பேரிடா் காலம்’ என உதயநிதியின் விமா்சனத்துக்கு தவெக பதில் அளித்துள்ளது. இதுதொடா்பாக தவெக தகவல் தொழில்நுட்பக்குழு சாா்பில் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பதிவு:
கடந்த திமுக ஆட்சி காலம் முழுவதும் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஏற்பட்டதுதான் பேரிடா் காலம். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு மக்கள் பணத்தை கொள்ளையடித்த திமுகவை தோற்கடித்து தவெக ஆட்சி அமைத்துள்ளது.
தற்போது, கொள்ளை அடிக்க இயலாத நிலையை உருவாக்கியுள்ளதால், இது திமுகவுக்குத்தான் பேரிடா் காலம். லஞ்சம், ஊழலற்ற நிா்வாகத்தை உருவாக்கி வரும் முதல்வா் ஜோசப் விஜய்யின் ஆட்சிதான், திமுகவுக்கான அரசியல் பேரிடா் காலம்.
கடந்த திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட பேரிடா் விலகி, தமிழக மக்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனா். திமுகவிடமிருந்து தப்பிய தமிழக மக்களுக்கு இது அழகிய தென்றல் காலம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.