முகப்பு
தமிழ்நாடு

நானே ஒரு அரசு பள்ளி மாணவி: விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்!

சமுக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலளித்துள்ளார்.

Updated On : 7 ஜூலை 2026, 9:11 am IST
அமைச்சர் கீர்த்தனா
பகிர்:

பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவியிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியது விமர்சனங்களுக்குள்ளான நிலையில் அதுதொடர்பாக அவர் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா சில நாள்களுக்கு முன் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அந்த மாணவி பதில் சொல்லத் தயங்கிய நிலையில் ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்துமாறு அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தினார். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement

Advertisement

ரீல்ஸ் மோகத்துக்காக இவ்வாறு விடியோ எடுத்து அரசுப் பள்ளியைத் தரம் குறைத்து காட்டுவதாக அமைச்சர் கீர்த்தனா மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வைத்தனர்.

இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக அரசு பள்ளியில் தான் படித்தபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இன்று சிலர், ’அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்’ என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா?

நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.

நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.

கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.

இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?

ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.

என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.

இன்னொரு கேள்வி... இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?

அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

I am a government school student: Minister Keerthana responds to criticism!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments