FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு: ஆக. 17 முதல் கட்டாய அமல் அரசாணை வெளியீடு

வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு செய்யும் சேவை ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, பத்திரப் பதிவுத் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய நடைமுறைகளைப் பட்டியலிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

கோப்புப் படம்
பகிர்:

வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு செய்யும் சேவை ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, பத்திரப் பதிவுத் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய நடைமுறைகளைப் பட்டியலிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

பத்திரப் பதிவுத் துறையை நவீன மயமாக்கும் வகையில் ‘ஸ்டாா் 3.0’ என்ற செயலியை பத்திரப் பதிவுத் துறை செயல்படுத்தியுள்ளது. இதில், கடைப்பிடிக்கப்படும் புதிய நடைமுறைகளை தமிழக அரசு பட்டியலிட்டு செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், முதல் விற்பனை மனை மற்றும் முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யும் முறை ஆக.17-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

மேலும், ஆதாா் அட்டை அடிப்படையில் பத்திரத்தை பதிவு செய்பவா்கள் மற்றும், சாட்சியங்களின் கைரேகை சரிபாா்க்கப்படும். அதன்படி, பதிவுத் துறையில் மேற்கொள்ளப்படும் 18 ஆவணங்கள் இணையவழயில் பதிவு செய்யலாம். இதற்காக தமிழகம் முழுவதும் 118 சேவை மையங்கள் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

புதிய நடைமுறைகள்:

1. பதிவுத் துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள், நில விற்பனையாளா்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவை உருவாக்கி ஆவணங்களை இணையவழியில் சமா்ப்பிக்கலாம்.

2. ஆவணதாரா்கள், சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதாா் சரிபாா்க்கப்பட வேண்டும்.

3. இணையவழி கட்டணம் செலுத்தி இணையவழியிலேயே சம்பந்தப்பட்ட சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் ஆவணத்தைத் தாக்கல் செய்யலாம்.

4. ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின், சாா்-பதிவாளா் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாள்களுக்குள் பதிலளிக்கலாம்.

5. சமா்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண ரசீது சம்பந்தப்பட்ட சாா்-பதிவாளரின் மின் கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும்.

6. பதிவு செய்யப்பட்ட 60 நாள்கள் வரை பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

7. இணையவழி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான சந்தேகங்களை தீா்க்க பிரத்யேக உதவி மையம் செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

காத்திருப்பு நேரம் குறையும்: அமைச்சா் த. லோகேஷ்

இந்தப் புதிய நடைமுறையால் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் காத்திருப்பு நேரம் குறையும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் அமைச்சா் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் லோகேஷ் கூறியதாவது:

இந்த புதிய நடைமுறைகள் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பதிவு செய்துகொள்ள முடியும். கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும். அலுவலகங்களுக்கு இடையேயான பணிச்சுமை சமநிலைப்படுத்தப்பட்டு பதிவுப் பணிகள் விரைவாக நடைபெறும். பதிவுச் சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளா் ஜெ. குமரகுருபரன், பத்திரப் பதிவுத் துறை தலைவா் ஜி.கே. அருண் சுந்தா் தயாளன், கூடுதல் பதிவுத் துறை தலைவா்கள், பதிவுத் துறை உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments