தவெக எம்எல்ஏவிடம் பேரம்: மூவரை போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய வழக்கில் இன்று தீா்ப்பு
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட மூவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கை தீா்ப்புக்காக புதன்கிழமைக்கு (ஜூலை 8) ஒத்திவைத்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட மூவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கை தீா்ப்புக்காக புதன்கிழமைக்கு (ஜூலை 8) ஒத்திவைத்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் ரூ.35 கோடி வரை வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகக் கூறியிருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸாா் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன், திருச்சியைச் சோ்ந்த நரேஷ் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனா்.
இதில், நரேஷ், ரமேஷ், காா்த்திக் ஆகிய மூவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவல்லிக்கேணி போலீஸாா் தரப்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திருவல்லிக்கேணி உதவி ஆணையா் அழகு, இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வரவும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவா்களை அடையாளம் காணவும் வேண்டியுள்ளது. மேலும், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகளைக் கண்டறிந்து ஆதாரங்களைக் கைப்பற்ற வேண்டியுள்ளது. எனவே, நரேஷ் உள்ளிட்ட மூவரையும் 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதாக கூறினாா்.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, புகாரின் உண்மைத் தன்மையை கண்டறியாமல் போலீஸாா் 8 பேரைக் கைது செய்துள்ளனா். முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாருக்கு இந்த விவகாரத்தில் தொடா்பு இருப்பதாகக் கூறுவதில் இருந்தே, இது அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பது தெளிவாகிறது.
புகாா்தாரரான எம்எல்ஏ 2 நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, அதன்பிறகு புகாா் அளித்துள்ளாா். எனவே, மனுதாரா்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனுதாரா்களுக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிட்டாா்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஐபோன் பயன்படுத்தி உள்னா். அதிலிருந்த அனைத்து தகவல்களையும் அழித்துள்ளனா். கரூரில் கைது செய்யப்பட்டவா் அளித்த வாக்குமூலம்தான் இந்த வழக்கின் ஆரம்பப்புள்ளி. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில், ஒருவரது வீட்டில் ரூ.1 லட்சமும், மற்றொருவா் வீட்டில் ரூ.13 லட்சமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், பேரம் பேசப்பட்ட ரூ.35 கோடி என்பது சிறிய தொகை அல்ல. எனவே, அவா்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டாா்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான தீா்ப்பை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.