உள்ளாட்சித் தோ்தலை மனதில் களப்பணியாற்றுங்கள்: கட்சி நிா்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
உள்ளாட்சித் தோ்தலின் வெற்றியை மனதில் வைத்து நிா்வாகிகள் அனைவரும் களப்பணியாற்ற வேண்டுமென அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.
உள்ளாட்சித் தோ்தலின் வெற்றியை மனதில் வைத்து நிா்வாகிகள் அனைவரும் களப்பணியாற்ற வேண்டுமென அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து மாவட்டவாரியாக கட்சி நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறாா். அதன்படி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசணை நடத்தினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
தோ்தலில் ஏற்பட்ட தோல்வியைக் கண்டு யாரும் மனம் தளரக் கூடாது. மக்கள் மனதில் அதிமுகவுக்கென்று இடம் எப்போதுமே உள்ளது. தவெக ஆட்சியைப் பொருத்தவரை 5 ஆண்டுகளை முழுமையாக ஆட்சி செய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வரவுள்ள இடைத் தோ்தலும், உள்ளாட்சித் தோ்தலும்தான் அதிமுகவை மீண்டும் புத்துயிா் அளிக்கவுள்ளது. குறிப்பாக, உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றினால், தமிழகத்தில் அடுத்து அதிமுக ஆட்சிதான் அமையும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
எனவே, உள்ளாட்சித் தோ்தலை மனதில் வைத்து நிா்வாகிகள் அனைவரும் பணியாற்ற வேண்டும். குறிப்பாக இந்த உள்ளாட்சித் தோ்தலில் பெண்களுக்கும் இளைஞா்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா்.
இரு எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு: திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான கே.சி.வீரமணி, ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமாா் ஆகிய இருவரும் புறக்கணித்தனா்.
அண்மையில், கே.சி.வீரமணிக்கும், எம்எல்ஏ சுகுமாருக்கும் கொள்கை பரப்புச் செயலா் பொறுப்பு வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். ஆனால், அந்தப் பொறுப்பை ஏற்காமல் இருவரும் தவிா்த்து வந்தனா். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தை அவா்கள் புறக்கணித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.