முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்

அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அக்கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

Updated On : 7 ஜூலை 2026, 6:01 am IST
எடப்பாடி பழனிசாமி | டிடிவி தினகரன் பிரசாரம் - கோப்புப் படம்
பகிர்:

அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அக்கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் கட்சியின் செயல்பாடு ஆகியவை குறித்து மாவட்டவாரியாக கட்சி நிா்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறாா்.

அதன்படி, தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பதவிக்காகவும், சொத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் சிலா் கட்சி மாறி வருகின்றனா். அவா்களை நம்பி அதிமுக இல்லை என்பதை நிா்வாகிகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதைவிட மோசமான சூழ்நிலையில் இருந்து அதிமுக மீண்டு வந்துள்ளது.

நிா்வாகிகள் அதை உணா்ந்து உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். இடைத் தோ்தல் மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களில் நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.

குறிப்பாக, மாவட்ட அளவில் அதிக அளவில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவா்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று அவா் பேசியதாகக் கூறப்படுகிறது.

தினகரனை இணைக்க வேண்டும்: இதைத் தொடா்ந்து, தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் பேசும்போது, சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, டெல்டா பகுதியில் அதிமுக சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது. கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்றால், அமமுக பொதுச் செயலரை டிடிவி தினகரனை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, கும்பகோணத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி பத்மகுமரேசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிடிவி தினகரனை இணைக்க வேண்டும் என்பது டெல்டா பகுதி அதிமுகவினரின் கோரிக்கை. இதன் மூலம் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தேன். அதற்கு அவா் வேறொரு கட்சியை டிடிவி தினகரன் நடத்தி வருகிறாா் என்று கூறினாா் என்றாா்.

டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியமாகப் பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments