முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!
கரூரில் நாளை 32 பேருக்கு முதல்வர் விஜய் அரசுப் பணி ஆணை வழங்கவுள்ளது பற்றி...
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணையை முதல்வர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வழங்குகிறார்.
கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் மற்றும் செந்தில்பாலாஜியும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
Advertisement
Advertisement
இருப்பினும், பாதுகாப்புகள் காரணமாக விஜய் நேரில் செல்லாமல், காணொலி வாயிலாக பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலும் மன்னிப்பும் கோரினார். தொடர்ந்து, நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரினார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது முதல்வராகியுள்ள விஜய், கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக நாளை கரூர் செல்லவுள்ளார்.
முதல்வரின் நிகழ்ச்சி நிரல் குறித்து வெளியான செய்திக் குறிப்பில், பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தொடர்ந்து, பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
அதேபோல், கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.
மேலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மனவாசி ஊராட்சியில் ரூ. 1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு, அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chief Minister Vijay to visit Karur tomorrow - Government job orders for 32 people
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.