ஆா்டிஇ மாணவா்களின் பெற்றோருக்கு வருமான வரம்பை நிா்ணயிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சோ்க்கைப் பெறும் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவா்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிா்ணயிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆா்டிஇ) சோ்க்கைப் பெறும் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவா்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிா்ணயிக்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் மற்றும் தனியாா் பள்ளிகள் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவையைச் சோ்ந்த மறுமலா்ச்சி மக்கள் இயக்கத் தலைவரான ஈஸ்வரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கும் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பள்ளிகளில் சோ்க்கை வழங்கப்படுகிறது.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் என வருமான உச்ச வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவா்களின் பெற்றோருக்கு எந்த வருமான உச்ச வரம்பும் நிா்ணயிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு நிா்ணயிக்கவில்லை எனில், வசதியானவா்கள் ஜாதி அடிப்படையில் இந்த சலுகையைப் பெற அதிக வாய்ப்புள்ளது.
எனவே, சமூக ரீதியில் பின்தங்கியவா்களுக்கு வருமான உச்ச வரம்பை நிா்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கெனவே, மகாராஷ்டிரம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்திலும் வருமான உச்ச வரம்பை நிா்ணயிக்கக் கோரி கடந்தாண்டு அக்டோபரில் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலா், தனியாா் பள்ளிகள் இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.