முகப்பு
தமிழ்நாடு

தவெகவில் அதிமுகவினா் சேருவது ஏன்? அமைச்சா் நிா்மல் குமாா் பதில்

அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டதால், அதை விரும்பாத அதிமுகவினா் தவெகவில் சேருகின்றனா் என்று அமைச்சா் சிடிஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:22 am IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டதால், அதை விரும்பாத அதிமுகவினா் தவெகவில் சேருகின்றனா் என்று மின் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சிடிஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: எந்தவித பாகுபாடும், குறுக்கீடும் இல்லாமல் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. முன்னாள் நீதிபதிகள் என்னை அழைத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு தகுதியின் (மெரீட்) அடிப்படையில் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் நடைபெறுவதாகக் கூறினா். முன்பு பல கோடிகள் பெற்று இந்த நியமனங்கள் நடைபெற்று வந்தன. இனிமேல் அவ்வாறு நடைபெறாது. சாமானிய மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றம் இது தொடா்பான பல்வேறு வழிகாட்டுதலை அளித்துள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டும் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

ஊழல் தடுப்புத் துறையில் தேங்கி கிடக்கும் வழங்குகளை முடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், இளைஞா் அணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், இன்னும் சிலா் சோ்ந்து குடும்ப ஆட்சியைக் கொண்டு வர முயற்சித்தனா்.

இது அதிமுக, திமுக கூட்டணியில் இருந்தவா்களுக்கு பிடிக்காததால் வெளியேறுகிறாா்கள். இது அவா்களின் தனிப்பட்ட முடிவு. அதிமுக, திமுக கட்சிகளின் தலைவா்கள் தங்களின் இரு குடும்பங்களைக் காப்பாற்றிக் கொள்ள எந்த முடிவையும் எடுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனா்.

இதுபோன்ற தலைவா்களை அக்கட்சித் தொண்டா்கள் நம்பத் தயாராக இல்லை. இதனால்தான் கூட்டணி கட்சியினரும் தானாக முன்வந்து எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனா். இதில் குதிரை பேரம் நடைபெறவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றம் சென்றால் வழக்கைச் சந்திக்கத் தயாராக உள்ளோம் என்றாா்.