அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம்! உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை!
தூத்துக்குடியில் சுமார் ரூ. 38,000 கோடி முதலீட்டில் அமையவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் குறித்து...
தூத்துக்குடியில் சுமார் ரூ. 38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய்யுடன் HD KSOE நிறுவனத்தின் உயர்நிலை அலுவலர்கள் சந்தித்தனர்.
முதல்வரை இன்று (ஜூன் 17) தலைமைச் செயலகத்தில்,
HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்நிலை அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்ட
HD ஹுண்டாய் நிறுவனம், உலகின் மிகப் பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைப்பதற்காக இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய கப்பல் கட்டுமானத் தள திட்டத்தின் செயல்பாட்டு நிலைகள் குறித்து, இந்நிறுவனத்தின் உயர்நிலை அலுவலர்கள், முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தினார்.
Advertisement
Advertisement
இந்தியாவில் புதிதாக உருவாகவுள்ள இந்தக் கப்பல் கட்டுமானத் திட்டத்தில் சுமார் 38,000 கோடி ரூபாய் (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 15,000 நபர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், துணைத் தொழில்கள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி மூலம் மாநிலத்தில், மேலும் பல வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
இத்திட்டத்திற்காக, சிப்காட் (SIPCOT) மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் (VOCPA) ஆகியவற்றுக்கு இடையே National Shipbuilding & Heavy Industries Park Tamil Nadu Limited (NSHIPTN) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்தக் கப்பல் கட்டுமானத் தொகுதியை நிறுவுவதற்கான முதல் கொள்கை அளவிலான (In-Principle) ஒப்புதலை, இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (Directorate General of Shipping) இருந்து இந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது, இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நிறுவனத்தின் உயர்நிலை அலுவலர்கள் முதல்வரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், தூத்துக்குடியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நிறுவனத்தின் உறுதியான ஆர்வத்தையும் தெரிவித்தனர்.
முதல்வர் விஜய், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் தூத்துக்குடியில் விரைவாக செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றும், திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான நிர்வாக ஆதரவும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, HD ஹுண்டாய் நிறுவனத்தினர் கப்பல் கட்டும் தளத்தை விரைவில் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.