முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவுக்கு திட்டங்கள் இல்லை! எடப்பாடி கே பழனிசாமி

ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவுக்கு புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை என்று எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்தது பற்றி...

Updated On : 18 ஜூன் 2026, 1:15 pm IST
முதல்வர் விஜய் - எடப்பாடி பழனிசாமி. - கோப்புப் படம்
பகிர்:

ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவுக்கு புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே பழனிசாமி வியாழக்கிழமை (ஜூன் 18) தெரிவித்துள்ளார்.

கடந்த மே 10 ஆம் தேதி முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து, மே 13 ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரையுடன் தொடங்கியது.

Advertisement

Advertisement

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஆளுநர் உரையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அதில் எந்த புதிய திட்டமும் இடம்பெறவில்லை. முதல்வர் விஜய் தில்லி சென்ற விஷயம் ஏற்கெனவே பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி. அதுதான் ஆளுநர் உரையில் இடம்பெற்றது.

இரண்டு நாள்களுக்கு முன்பு, நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்ட அதே செய்திதான் ஆளுநர் உரையிலும் இடம்பெற்றது.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான போதைப்பொருள் ஒழிக்கப்படும், பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றெல்லாம் முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது அன்றாடம் நிகழும் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இதுவரை, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போதைப்பொருள் தடுப்புக்கு தனிக்குழு அமைக்கப்பட்ட பிறகுதான், முன்பை விட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகாகியுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவை மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 38 நாள்களில் 150 போக்ஸோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான 126 பாலியல் குற்றங்கள், 130 கொலை வழக்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே, தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு பாதுகாக்கப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

summary

AIADMK General Secretary Edappadi K. Palaniswami stated on Thursday (June 18) that the Governor's address did not contain as many new schemes as expected.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.