மேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தின் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தவெக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேட்டூர் அணை நீர்த் திறப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதியில் திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.
Advertisement
Advertisement
ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் ரூ. 10,000 கோடிக்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்துக்குத் தள்ளிவிட்டுள்ள இன்றைய அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணிநேரமாகக் குறைத்து அறிவித்துள்ளது இன்றைய அரசு.
ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம்கூட புரியாமல் இன்றைய அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.
AIADMK Leader Edappadi Palaniswami urges TVK government to open Mettur Dam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.