முகப்பு
தமிழ்நாடு

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

சில மாதங்களிலேயே குழந்தைகளின் கைகளுக்கு மோதிரம் பொருந்தாமல் போய்விடும் என திருமாவளவன் கருத்து...

Updated On : 24 ஜூன் 2026, 6:43 pm IST
திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ. 755 கோடி செலவிடப்படும் நிலையில், அதனை தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் பிரசவ அறைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த குழந்தைகளுக்கு அண்விக்கப்படும் மோதிரம், சில மாதங்களிலேயே அக்குழந்தைகளுக்கு பொருந்தாமல் போய்விடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திருமாவளவன் பதிவிட்டுள்ளதாவது:

''அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையில் வசூலிக்கின்றனர்.

சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

விஜய் பேசியது ஏற்புடையதல்ல

''ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், மேனாள் முல்வர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல. கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

summary

Maternity ward needed: Demand to reconsider the thaaimaman thanga mothiram schem thol thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments