முகப்பு
தமிழ்நாடு

உதவி மின்பொறியாளர் பணி: இளைஞர்களின் அரசுப் பணி கனவில் அநீதி! அண்ணாமலை

மின்பகிர்மானக் கழகத்தில் உதவி மின்பொறியாளர் பணி நியமனத்தில் நிர்வாகக் குளறுபடி என அண்ணாமலை குற்றச்சாட்டு...

Updated On : 29 ஜூன் 2026, 5:45 pm IST
வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை - கோப்புப் படம்
பகிர்:

மின்பகிர்மானக் கழகத்தில் உதவி மின்பொறியாளர் பணி நியமனத்தில் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டிஆர்பி தேர்வைப் போலவே, மின்பகிர்மானக் கழகத்தில் உதவி மின்பொறியாளர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு தளர்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

Advertisement

"கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில், உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களுக்கான TNPDCL (தமிழ்நாடு மின் விநியோகக் கழகம்) தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகக் காரணங்களைக் கூறி, இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக, TANGEDCO (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்) அறிவித்தது. மேலும், TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி, TNPSC (டிஎன்பிஎஸ்சி) மூலமாக, இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்றும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக, 2025 ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 26.07.2024 அன்று வெளியிடப்பட்ட, பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக, முன்பு ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில், 195 இடங்கள், பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என்று திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அந்தத் துறை சார்பான தேர்வுகள் ரத்து செய்து, எந்த மறு அறிவிப்பும் செய்யாமல் காத்திருக்க வைத்து விட்டு, அதே பணியிடங்களை, பொதுப்பணித் துறை சார்பான தேர்வுகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது, அந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. குறிப்பாக, அரசின் நிர்வாகக் குளறுபடி காரணமாக, தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு தளர்வு வழங்கும் தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91 ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால், வயது உச்ச வரம்பு, 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில், உதவி மின்பொறியாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே தேர்வுகள், 2020 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், பொதுவாக வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்வு என்பது எப்படிப் பொருத்தமானதாக அமையும்?

இந்த நிலையில், வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள், கடந்த 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களைக் கூட தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். TNPSC அமைப்பின் இந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் பணிக்காகக் காத்துக் கொண்டிருந்த தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துரதிருஷ்டவசமானது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதே போல, கடந்த 2013 ஆம் ஆண்டு, இதே போன்று, நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம், ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை, தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. கடந்த 2019 முதல், 2024 வரை, எந்தப் பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில், இதே சூழ்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும், வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, அந்த நிவாரணத்தை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். கடந்த கால முன்னுதாரணங்களைப் பின்பற்றி, நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். மேலும், தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Assistant Electrical Engineer Post: Injustice Done to Youths Dreams of Government Jobs: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments