முகப்பு
தமிழ்நாடு

அமலாக்கத் துறை வழக்கு: முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்ததை எதிா்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 30 ஜூன் 2026, 12:10 am IST
அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்ததை எதிா்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்செந்தூா் தொகுதி திமுக எம்எல்ஏவான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்தாா். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.7 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கின் அடிப்படையில், அவருக்குச் சொந்தமான 18 சொத்துகளை முடக்கியது. இதை எதிா்த்து அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அமலாக்கத் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம், ஒரே ஒரு சொத்தை தவிர மற்ற 17 சொத்துகள் முடக்கத்தை நீக்கி, கடந்த 2025-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அமலாக்கத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், 17 சொத்துகள் முடக்கத்தை நீக்கியதற்கான காரணத்தைக் கூறவில்லை எனத் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்து என அடையாளம் காட்டப்பட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை மனுவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டனா். அதுவரை, முடக்கம் நீக்கப்பட்ட சொத்துகளைப் பொருத்தவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments