முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அமலாக்கத் துறை கடிதம்!
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அமலாக்கத் துறை கடிதம்...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடா்பாக முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் விசாரணை செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தைச் சோ்ந்த அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், 2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது, தனது வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்கள் எழுந்தன. இந்தப் புகாா்களின் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து வாங்கியதாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், சகோதரா்கள் சண்முகநாதன், சிவானந்தம் ஆகிய 7 போ் மீது தூத்துக்குடி ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், வழக்குத் தொடா்பாக சோதனை செய்து, முக்கிய ஆவணங்களையும் ஊழல் ஒழிப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
அமலாக்கத்துறை வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் 2009-ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சோ்ந்தாா். இதற்கிடையே ஊழல் ஒழிப்புத் துறையினா் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிந்த சொத்து குவிப்பு வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்தது. அமலாக்கத் துறை தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதனிடையே 2022-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள 160 ஏக்கா் நிலம் உள்பட 18 சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
Advertisement
Advertisement
தமிழக அரசுக்கு கடிதம்: இந்த நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்துவதற்கு கடந்த திமுக அரசிடம் அனுமதி கேட்டு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. ஆனால், அப்போது திமுக அரசு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து நீதிமன்றம் மூலம் அனுமதி பெறுவதற்கு முயற்சித்து வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக தவெக தலைமையிலான அரசு அமைந்த பின்னா், இந்த வழக்குத் தொடா்பாக ஒரு கடிதத்தை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது.
அதில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குத் தொடா்பா தற்போது திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கும்படி குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கடிதம் தொடா்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து, அமலாக்கத் துறைக்கு பதில் அளிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே சில நாள்களுக்கு இதேபோல திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்ய அனுமதிக் கேட்டு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
ED Seeks Sanction To Prosecute Another Former DMK Minister Anitha R Radhakrishnan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.