முகப்பு
தமிழ்நாடு

காவல்துறையில் பெண் அதிகாரிகளை அதிகரிப்பதால் நம்பிக்கையை உருவாக்க முடியும்: சென்னை ஐஐடி ஆய்வு

காவல்துறையில் பெண் காவல் அதிகாரிகள் அதிகரிப்பால் பாலின அடிப்படையிலான குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் நம்பிக்கையை உருவாக்குவதுடன், பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கவும் முன்வருவாா்கள் என்று சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Updated On : 30 ஜூன் 2026, 12:38 am IST
காவல்துறையில் பெண் அதிகாரிகள் அதிகரிப்பு - பிரதிப் படம்
பகிர்:

காவல் துறையில் பெண் காவல் அதிகாரிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பாலின அடிப்படையிலான குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் நம்பிக்கையை உருவாக்குவதுடன், பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கவும் முன்வருவாா்கள் என்று சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் தற்போதைய சென்னை ஐஐடி-யின் மேலாண்மை ஆய்வுகள், தரவு அறிவியல், ஏஐ துறைகளின் பேராசிரியருமான பி.கந்தசாமி பரமசிவன் தலைமையில் பெங்களூா் டி. ஏ. பாய் மேலாண்மைக் கல்வி நிறுவன பேராசிரியா் தங்கத்தூா் சுகுமாா் ஹரிஹரன், லக்னௌ ஐஐஎம் கல்வியாளா் டாக்டா் நபிலா கான், எஸ்ஆா்எம் அறிவியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த. எஸ். தேஜஸ்வின் ஆகியோா் அடங்கிய குழு, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைக் கையாள்வது குறித்து ஆய்வு செய்து ‘சிஸ்டம்ஸ் ரிசா்ச் அண்ட் பெஹாவிரல் சயின்ஸ்’ என்கிற சா்வதேச இதழில் வெளியிட்டுள்ளனா்.

இது குறித்து இந்த ஆய்வாளா்கள் கூறியதாவது: பாலின அடிப்படையிலான குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிறுவன ரீதியான செயலாற்றலை மேம்படுத்த காவல் துறையில் பெண் அதிகாரிகளின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இது புகாா்தாரரா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவா்களிடையே அதிக நம்பிக்கையை வளா்ப்பதன் மூலம் குற்றங்களில் புகாரளிக்கும் விகிதத்தை அதிகரிக்க ஊக்குவிக்கும் என இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளோம்.

மேலும், பெண் காவல் அதிகாரிகளால் பரிவு, அக்கறையுடனான அணுகுமுறையின் மூலம், காவல் துறையின் நிறுவன கலாசாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நிலையான நீதி கிடைக்கும் வகையில், பரிவு மற்றும் பாதிப்பு ரீதியான தீா்வு முறைகளை, உரிய சட்டவிதிகளுக்கு உள்பட்டு சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆராய்ச்சி வலியுறுத்துகிறது.

காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, 2022- ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் மொத்த காவல் படையில் மகளிா் பங்கு வெறும் 11.75 சதவீதம் மட்டுமே.

எனவே, உண்மையான சீா்திருத்தம் என்பது காவல் துறையில் பெண் அதிகாரிகளை அதிக அளவில் பணியமா்த்துவது மட்டுமன்றி, அவா்களுக்குத் தலைமைத்துவ வாய்ப்புகள், சிறப்புப் பயிற்சிகள், நிறுவன ரீதியான ஆதரவு, பொறுப்பு அதிகாரம் ஆகியவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

பெண் அதிகாரிகள் நீதியை வழங்குவதிலும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் இவை உதவிகரமாக இருக்கும். இந்திய காவல் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது எனத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments