குடிமைப் பணித் தேர்வில் கிடைத்த அனுபவம் எங்கும் பலனளிக்கும்: இறையன்பு
கல்விச் சிந்தனை அரங்கில் இறையன்பு பேசியது குறித்து...
முழு ஈடுபாட்டுடன் பணி செய்வது தியானம் செய்வதைப் போன்றது என முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் விவாதத்தை தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் ஒருங்கிணைத்தார்.
பொதுத் துறை சேவையில் இளைஞர்களின் அர்ப்பணிப்பு என்ற தலைப்பில் இறையன்பு பேசியதாவது:
Advertisement
Advertisement
முழு ஈடுபாடுடன் பணி செய்வதும் ஒருவகையில் தியானம் செய்வதைப்போன்றதுதான். அர்ப்பணிப்புடன் வேலையில் ஈடுபடுவது ஒருவகையில் மன நிறைவை அளிக்கும். தூய்மைப் பணியாளர்கள், தச்சர் என எந்தவகையிலான பணிக்கும் ஒது பொருந்தும்.
தூய்மைப் பணியாளர்கள் 10 நாள்களுக்கு விடுமுறை எடுத்தால், உங்களால் வீட்டில் தூங்கக் கூட முடியாது. பொதுப் பணித் துறையினர், அரசு ஊழியர்கள், தனியார் துறை பணியாளர்கள் என யாராக இருந்தாலும் மனநிறைவுடன் பணி செய்ய வேண்டியது அவசியம்.
2004 ஆம் ஆண்டு குஜராத்தில் நிலநடுக்கத்தின்போது தந்தையும் மகனும் இடிபாடுகளில் சிக்கி இறந்தபோது கூட, மீட்புப் பணிகளில் ஆட்சியர் ஒருவர் ஈடுபட்டார். தியாக உணர்வுடன் குடிமைப் பணி அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
பொதுமக்கள் நலனுக்காக குடிமைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தையும் தியாகம் செய்யும் தியாக மனப்பான்மையுடன் உள்ளனர்.
என் நண்பர் ஒருவர் வாழ்நாளில் முதல்முறையாக ஷூ வாங்குவதற்குச் சென்றார். அவருக்கு கடையின் ஊழியர் ஷூ அணிவிக்க முயற்சித்தார். மற்றொரு நபர் தனது பாதங்களுக்கு ஷூ அணிவிப்பதை விரும்பாத அவர், கடை ஊழியரைத் தடுத்தார். தானே அணிந்துகொள்வதாகக் கூறினார்.
ஆனால், கடைக்காரர் கூறினார், கடைக்கு வெளியே ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்களுக்கு ஷூ அணிவிக்கமாட்டேன். ஆனால், கடைக்குள் ஒரு கோடியே ஒரு லட்சம் கொடுத்து எனக்கு உதவாதே எனக் கூறினாலும், அதனை ஏற்க மாட்டேன். உங்களுக்கு ஷூ அணிவிப்பதில் உதவுவேன். ஏனென்றால் இதுதான் வேலை கலாசாரம் எனக் கூறினார்.
இதுபோன்ற பணியிட கலாசாரம் எல்லா இடங்களிலும் உண்டு. அதனை கடைபிடிப்பது மிகவும் அழகானது.
குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் பலமுறை முயற்சிக்கும்போது அழுத்தத்திற்குள்ளாகின்றனர் என்பதை மறுக்க முடியாது. அரசுத் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் வேலையில்லாதவர்கள் என்றே கருதப்படுகின்றனர்.
ஆனால், அவர்கள் தனியார் துறைக்குச் சென்றாலும் அதில் கிடைத்த அறிவு பலனளிக்கும். சொந்தமாகத் தொழில் தொடங்கும்போதும் குடிமைப் பணித் தேர்வில் கிடைத்த அனுபவம் உதவுகிறது.
அரசுத் துறையில் சேவையாற்ற 40% பேர் தனியார் துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி அரசியல்வாதிகளால் நிரப்பப்படுகிறது. அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளில் சில பரிந்துரைகள் அதிகாரிகளுடையதாக இருக்கும்.
குடிமைப் பணியாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தால் கட்டாயம் மிகப்பெரிய வளமான சமூகத்தை உருவாக்க முடியும். பல அரசுத் துறை அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கின்றனர். இதனை பொதுமைப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
former Chief Secretary of Tamil Nadu and Writer Irai Anbu in ThinkEdu 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.