அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!
ஆசிரியர் பணிக்கு ஒரு பட்டப்படிப்பும், பி.எட். படிப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-பேராசிரியர் அ. ஜாஹிதா பேகம்
"ஆசிரியர் பணி அறப்பணி- அதற்கே உன்னை அர்ப்பணி' என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள். ஆனால், இன்று ஆசிரியர் பணிக்கு ஒரு பட்டப்படிப்பும், பி.எட். படிப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாறும் காலத்திற்கேற்ப ஆசிரியர் பணியும் மாறிவிட்டது.
பொதுவாக, நமது வீடுகளில் விடுமுறைக் காலங்களில் உறவினர் குழந்தைகளோ, பக்கத்து வீட்டு குழந்தைகளோ வந்துவிட்டால் அவர்களைச் சமாளிப்பது என்பது பலருக்கும் போதும், போதும் என்றாகிவிடும். மேலும், சிலருக்கோ தங்கள் குழந்தைகளைக்கூட விடுமுறை நாள்களில் சமாளிப்பது என்பது பெரும்பாடாகிவிடும்.
Advertisement
Advertisement
ஆனால், ஒரு வகுப்பறையில், ஓர் ஆசிரியர் தினமும் 30 முதல் 60 மாணவர்களை அமர்த்தி, பாடம்நடத்தி, படிக்கவைத்து,"நடத்தைகளைக் கண்காணித்து நல்வழிப்படுத்தி' என்று பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது. இதெல்லாம் எல்லோராலும் முடியுமா? அதனால்தான் இந்தப் பணிக்கென்றே சில குணநலன்கள், பண்புகள், நடத்தைகள் தேவை. அவற்றில் முக்கியமானது பொறுமை.
பொறுமையுடன் மாணவர்களைக் கையாண்டாலே போதும்; பாடம் நடத்துவது, கற்பிப்பது எல்லாம் பிறகுதான். அதனால்தான் யாருக்கெல்லாம் இந்த ஆசிரியர் பணியில் விருப்பம் இருக்கிறதோ, அவர்கள்தான் இந்தப் பணிக்கு ஏற்றவர்கள். ஆனால், இன்று கல்வி என்பது வியாபாரமாகி விட்டதால், குறைந்த செலவில் நிறைந்த வருமானம் என்று ஆசிரியர் பணிக்கு வருகின்றனர்.
இதற்குப் பயிற்சியளிக்கும் விதமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே "பி.எட்' பட்டப்படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்பு செய்ய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு, 2015-2016 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
நன்கு படித்து திறமை மற்றும் நுண்ணறிவான மாணவர்கள் அனைவரும் மருத்துவம், பொறியியல், வங்கி, குடிமைப் பணிகள் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். பெரும்பாலான புத்திசாலி மாணவர்களை ஈர்ப்பது மற்ற வேலைகள்தானே தவிர ஆசிரியர் பணி அல்ல.
ஆசிரியர் பணிக்கு உத்வேகம் உள்ள அறிவுபூர்வமான, துடிப்பான, படைப்பாற்றல் மிக்க பணம் ஒன்றையே குறிக்கோளாக நினைக்காத, சமூக அக்கறையுள்ள, மாணவர்களிடம் தாய்மை உணர்வுடன் நடந்து கொள்ளக்கூடிய நேர்மறை உணர்வுகள் அதிகம் உள்ளவர்களே ஆசிரியர் பணிக்கு ஏற்றவர்கள். வைரத்தை வைரத்தால் மட்டும்தான் அறுக்க முடியும் என்பதுபோல அறிவார்ந்த ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களை உருவாக்க முடியும்.
கல்வி என்ற பெயரிலும், கற்பித்தல் என்ற பெயரிலும் சொல்வதையே சொல்லும் கிளிப்பிள்ளைகளைபோல மாணவர்களை உருவாக்குவது மட்டும் ஆசிரியர்களின் பணி அல்ல. அறிவிலும், திறன்களிலும், சிந்திக்கும் திறனுள்ள அறிவார்ந்த மாணவர்களை உருவாக்குவதுதான் ஆசிரியர்களின் முக்கியப் பணியாகும். நுண்ணறிவுடன்கூடிய புத்திசாலி மாணவர்கள் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆசிரியர் பணியே அனைத்துப் பணிகளுக்கும் "தாய்' என்று கூற முடியும். ஆசிரியர்களால் மட்டுமே ஒழுக்கமான, திறமையான, அறிவார்ந்த, அறிவுபூர்வமான அக்கறையுள்ள துடிப்பான சமுதாயத்தை உருவாக்க முடியும். படைப்பாற்றல் உள்ளவர்கள் இந்தப் பணியில் சிறந்து பணியாற்ற முடியும்.
எத்தனையோ இளைஞர்கள் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றாலும் தகுந்த வேலை கிடைக்காமல் அவதியுறுவதைப் பார்க்கிறோம். ஆனால், ஆசிரியர் பட்டம் பெறாமல்கூட ஒருவரால் தனிப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வேலைவாய்ப்பு பெற முடியும்.
இன்றைய மாணவர்கள் பரிணாம வளர்ச்சியின்படி சிறந்த நுண்ணறிவு நினைவாற்றல் மிக்கவர்கள். இவர்களுக்கான ஆசிரியர்களும் இத்தகைய திறன்கள் மிக்கவர்களாக இருப்பது அவசியம். ஆசிரியரையே கேள்வி கேட்கும் அளவுக்கு படைப்பாற்றல் திறன்கள் உடைய மாணவர்களின் சிந்தனைத் திறன்களை வளர்க்க வேண்டும் என்றால், முதலில் ஆசிரியர்களுக்கு உயர் சிந்தனைத் திறன்கள் இருப்பது அவசியம். போட்டித் தேர்வுகளில் நினைவாற்றல் பயிற்சியைவிட உயர் சிந்தனைத் திறன்கள்தான் அதிகம் சோதிக்கப்படுகின்றன.
கல்வியில் சிறந்து விளங்கும் முதல் தர மதிப்பீடு பெறும் மாணவர்கள் தயங்காமல் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், அத்தகைய மாணவர்கள் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுப்பது மிகக் குறைவு என்பதுதான் உண்மை. ஏனெனில், இதர பணிகள் அவர்களை அதிகம் கவரும் வகையில் அடைந்துள்ளன. எனவே, அறிவார்ந்த மாணவர்களை ஆசிரியர் பணியில் ஈடுபடுத்த அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்க முன்வர வேண்டும்.
கட்டணமில்லா ஆசிரியர் கல்வி, இலவச விடுதி வாய்ப்பு, பயிற்சியின்போது பண உதவி, அரசுப் பணி உத்தரவாதம் போன்றவற்றை வழங்கினால் ஆசிரியப் பணிக்கு அறிவான, துடிப்பான இளைஞர்கள் கிடைப்பார்கள்.
ஜெர்மனி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஆசிரியப் பணி அனைத்துப் பணிகளையும்விட முதன்மையான இடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் நமது நாட்டிலும் தலைசிறந்த ஆசிரியர்கள் அதிக அளவில் இருந்தார்கள். மீண்டும் அதை மீட்டெடுக்க ஆசிரியர் கல்வியை மாணவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் சவாலானதாகவும், சலுகைகள் நிறைந்ததாகவும் மாற்றியமைக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி முடித்தப் பிறகு "டெட்' தகுதித் தேர்வை வைத்து தேர்ந்தெடுப்பதைவிட, ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு முன்னரே போட்டித் தேர்வுகள் மூலம் (ஸ்கிரீனிங்) தேர்ந்தெடுத்து அறிவார்ந்த இளைஞர்களை ஆசிரியர் பணிக்கு ஈர்க்க அரசு முன்வர வேண்டும்.