முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளதைப் பற்றி...
முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!
Advertisement
Advertisement
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2,000-ஐ மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,200-ஐயும், 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 3,500-ஐயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 4,000-ஐயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கியது போலவே, எந்தவித அறிவிப்பும் இல்லாமல் விளிம்பு நிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதியாக ரூ.2,000-ஐ வரவு வைத்திருப்பது பயனாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Chief Minister Stalin has announced that an additional Rs. 2,000 has been credited to the old age pension.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.