மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!
மாநிலங்களவைத் தேர்தலுக்கான 6 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது பற்றி...
தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்காக வழங்கப்பட்ட 6 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதனின் வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகவுள்ள திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் அதிமுக சார்பில் தம்பிதுரையும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில் அன்புமணியும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதனும் ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.
இன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் திமுகவின் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ், அதிமுகவின் தம்பிதுரை, பாமகவின் அன்புமணி ஆகிய 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததாலும் வேட்புமனுவை முழுமையாக நிரப்பாததாலும் சுயேச்சையாகப் போட்டியிட்ட சுவாமிநாதனின் வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வேறு யாரும் போட்டியிடாததால் இந்த 6 பேரும் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rajya Sabha elections: Nominations of 6 people including Trichy Siva and Thambidurai accepted
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.