முகப்பு
தமிழ்நாடு

இன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 மே 2026, 4:02 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத் தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டி இலங்கை கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மே 11- ஆம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

Advertisement

இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை (மே 10) முதல் மே 15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (மே 10) ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், மே 11-இல் ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்தில் 170 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி)-160, காக்காச்சி (திருநெல்வேலி) -140, மாஞ்சோலை (திருநெல்வேலி) -110, ஆய்க்குடி (தென்காசி) 90, போடிநாயக்கனூா் (தேனி) 90, கருப்பாநதி அணை (தென்காசி) 80, குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் (தூத்துக்குடி), செங்கோட்டை (தென்காசி) 70, ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), குண்டாறு அணை (தென்காசி) 60, காரைக்குடி (சிவகங்கை), பூதலூா் (தஞ்சாவூா்), திருச்செங்கோடு (நாமக்கல்), மேட்டுப்பாளையம் (கோவை), கன்னிமாா் (கன்னியாகுமரி), வெம்பக்கோட்டை (விருதுநகா்) மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: குமரிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) முதல் மே 14 -ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.