17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், மதுரை,திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், மதுரை,திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலோர கா்நாடகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு பருவமழை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளம் - கா்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும், மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு, வடகிழக்கு வங்கக்கடலில் முன்னேறியுள்ளது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை(ஜூன் 6) முதல் ஜூன் 11 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பூா், மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூா், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகா், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை:தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக்காற்று ஜூன் 9 வரை மணிக்கு 60 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும். மேலும், தெற்கு வங்கக்கடல், அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மழை அளவு:தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 170 மி.மீ மழை பதிவானது. ஊத்து (திருநெல்வேலி)- 150 மி.மீ, காக்காச்சி (திருநெல்வேலி)- 120 மி.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி)- 100 மி.மீ, பேச்சிப்பாறை, பாலமோா் (கன்னியாகுமரி)- தலா 60 மி.மீ, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சிற்றாறு- 1 (கன்னியாகுமரி), குண்டாறு அணை (தென்காசி), பெரியாறு (தேனி)- தலா 50 மி.மீ. பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.