இனி தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் : ஆதவ் அர்ஜுனா
முதல்வர் பதவியேற்பின்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் 3வதாக இசைக்கப்பட்டது ஏன்? என ஆதவ் அர்ஜுனா விளக்கம்...
இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் இசைக்கப்படும், இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (மே 10) தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3வதாக இசைக்கப்படுவதில் தவெக அரசுக்கும் உடன்பாடில்லை எனவும் குறிப்பிட்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (மே 10) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடலும் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.
முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் 3வதாக பாடப்பட்டது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளதாவது:
''நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற லட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்'' எனப் பதிவிட்டுள்ளார்.
From now on, Tamil Thai Vazhthu will be played first: TVK Minister Adhav Arjuna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.