ஆதவ் அர்ஜுனா அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி பேசியது பற்றி..
ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி மற்றும் அவரது மாமியார் தொடர்பாக வெளியாகியுள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் மிகுந்த கவலை அளிக்கின்றன. அமலாக்கத்துறை அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
ஜான் பிரிட்டோ பல ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததுடன், ஹவாலா முறையில் உறவினர்களுக்குப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஜான் கென்னடி, ஜான் பிரிட்டோ, அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி உள்ளிட்டோர் மீது கேரளத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது. தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது முதலமைச்சர் விஜய்யின் நோக்கம். ஆனால், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதவ் அர்ஜுனா தற்போதைய ஆட்சியின் முக்கிய முகமாகக் கருதப்படுகிறார். அவரது மனைவி தொடர்புடைய வழக்கிலிருந்து முழுமையாக விடுபடும் வரை, அவரை அமைச்சரவையிலும் கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும்.
மேலும், ஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த பணத்தின் மூலாதாரம் என்ன என்பதையும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் அவரது மூலம் வந்ததாகக் கூறப்படும் பணம் யாருடையது என்பதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும். அமலாக்கத்துறையும் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநரும், மத்திய உள்துறையும் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளேன்.
மேலும், லாட்டரி மார்ட்டின் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் மற்றும் நிதி தொடர்புகள் குறித்தும் மத்திய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும். லாட்டரி விற்பனையே ஒரு மோசடியான செயல். ஊழலைவிடப் போதைப்பொருள் கடத்தல் மிகவும் மோசமான குற்றம்; அது கொலைக் குற்றத்துக்குச் சமமானது. எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
Krishnasamy has urged that Aadhav Arjuna be removed from the cabinet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.