முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு! எப்படி இருக்கும்?
முதல்வர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிளஸ் பாதுகாப்பு பற்றி...
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு இன்று காலை முதல் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தவெக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், மாநில முதல்வர்களுக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பை விஜய்க்கும் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, விஜய் கட்சி தொடங்கியவுடன் பிரசாரத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ’ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கிருந்தது.
‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு என்றால் என்ன?
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் ‘சிறப்பு பாதுகாப்புப் படை’க்கு (எஸ்பிஜி) அடுத்தபடியாக இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கிறது.
மாநில முதல்வர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.
இந்த பாதுகாப்பின் கீழ் இருப்பவர்களுக்கு 24 மணி நேரமும், மத்திய பாதுகாப்புப் படையினர் அடங்கிய 55-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.
10-க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள், சி.ஆர்.பி.எஃப், சி.ஐ.எஸ்.எஃப். உள்ளிட்ட மத்திய ஆயுதப் படை வீரர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பர்.
எம்பி 5 உள்ளிட்ட அதிநவீன துப்பாக்கிகள் வைத்திருக்கும் கமண்டோக்கள், முதல்வர் வாகனத்தை சுற்றியும் குறைந்தது 5 குண்டு துளைக்காத கார்களில் பாதுகாப்பு அளிப்பார்கள்.
செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை
இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் இருப்பவர்கள், அவர்களின் பயணத் திட்டங்கள், அன்றாட நிகழ்வுகள் என அனைத்தையும் முன்கூட்டியே பாதுகாப்புப் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்.
செல்லும் வழித்தடங்கள், நேரங்கள், சந்திப்புகள் என அனைத்தும் பாதுகாப்புப் பிரிவின் அறிவுறுத்தல்படியே பின்பற்ற வேண்டும்.
பாதுகாப்பு வளையத்தில் இருப்பவரை யார் சந்திக்க வந்தாலும் அவர்களை சோதனை செய்ய பாதுகாப்புப் பிரிவினருக்கு முழு உரிமையும் இருக்கிறது.
முதல்வர் விஜய்யின் கான்வாய் செல்லும்போது இசட் பிளஸ் பிரிவின் முதல் வாகனத்துக்கும் கடைசி வாகனத்துக்கு இடையே யாருடைய வாகனத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்.
'Z-Plus' Security for Chief Minister Vijay! What will it be like?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.