பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதல்வர் விஜய் அறிக்கை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி...
சட்டப்பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று தமிழக முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்க்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாததால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றை ராஜிநாமா செய்ததாகவும், தொகுதி மக்களுக்கு இன்னும் நன்றிகூட தெரிவிக்கவில்லை எனவும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளித்து பதிவிட்ட முதல்வர் விஜய், வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதற்கு கொளத்தூரை பார்த்துமா தெரியவில்லை எனவும், தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் திமுக புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
Advertisement
Advertisement
இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், வீட்டுக்குச் சென்று முதல்வர் விஜய் அறிக்கை வெளியிடுவதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இன்று (மே 13) பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதல்வருக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க டெய்லி அட்டண்டன்ஸ் (தினமும் வருகைப்பதிவு) போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதல்வராகவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா சிஎம் சார்?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சியைப் பத்தி போஸ்ட் (பதிவு) பண்ணியிருக்கீங்களே, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, சோஃபா செட் அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியாக எங்களோட வெற்றி” எனக் கூறியுள்ளார்.
Udhayanidhi Stalin has criticized Tamil Nadu CM Vijay for issuing a statement after returning home, rather than responding in the Legislative Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.