உதயநிதி வைத்த கோரிக்கை! உடனே ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய்!
உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றியது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக முதல்வர் சி. ஜோசப் விஜய் ஏற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மேலும், உதயநிதி பேசுகையில், ”மேக்கேதாட்டு அணை தொடர்பாக கடந்த 4.3.2025 அன்று, அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர், மத்திய நீர்வளத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், நதிநீர் தாவா சட்டம் 1956 -ன் படி, மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்னை தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆகவே, தற்போதைய தீர்மானத்தில் இந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டபடி, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று இந்த பேரவை கேட்டுக் கொள்கிறது என்பதை சேர்க்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பதிலுரை அளித்த முதல்வர் ஜோசப் விஜய், ”அரசின் தனித் தீர்மானத்தில் ஒரு கருத்தை சேர்க்க எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தனி நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக ஏற்கனெவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை நான்காவது பத்தியாக சேர்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
The request made by Udhayanidhi - Chief Minister Vijay fulfilled it immediately
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.