கேரள முதல்வர் பதவியேற்பு விழா! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது பற்றி..
திருவனந்தபுரம் : கேரள முதல்வராக வி.டி. சதீசன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வரும், காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அவர் விழாவில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கவில்லை.
இது குறித்து வெளியான தகவலில், தமிழக முதல்வர் விஜய், கேரளம் செல்ல முன்கூட்டியே திட்டமிடவில்லை, அது மட்டுமல்லாமல், கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றால் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, காவல்துறைக்கு பெரிய சவாலாக மாறலாம், விஜய்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியதிருக்கும், ஏற்கனவே பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பங்கேற்பதால் அவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது, கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கேரள மாநில நிர்வாகத் துறை மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கேரள முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி.சதீசன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி. சதீசனுடன் 20 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில், முதல்வர் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள் (கா்நாடகம், தெலங்கானா, ஹிமாசல பிரதேசம்), கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஏப்.9-இல் ஒரே கட்டமாக நடந்த பேரவைத் தோ்தலில் 102 இடங்களுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்டிஎஃப்) 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இடதுசாரி கூட்டணிக்கு வெறும் 35 இடங்களே கிடைத்தன. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, முந்தைய பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன், 10 நாள்களாக நீடித்த இழுபறிக்குப் பின்னா் புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு இன்று அவரது தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுக் கொண்டது.
Kerala Chief Minister's swearing-in ceremony! Why didn't Tamil Nadu Chief Minister Vijay attend?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.