கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்: இபிஎஸ் குறித்து சி.வி. சண்முகம் பேச்சு
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல அதிமுகவினர் ஒன்றிணைய இபிஎஸ் அறிக்கை விடுத்துள்ளார் என்று சி.வி. சண்முகம் பேசியிருக்கிறார்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல, தனது பொறுப்புக்கு பாதிப்பு வருகிறது என்றவுடன், தவறு செய்தவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்கிறோம் என அறிக்கை விடுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுகவில், இபிஎஸ் ஒரு அணியாகவும், சிவி சண்முகம், வேலுமணி தரப்பில் மற்றொரு அணியாகவும் பிரிந்துள்ளது.
இந்த நிலையில், நமக்குள் பிரச்னைகள் இருக்கலாம்; அதை நாம் பேசி தீா்த்துக் கொள்ளலாம். கசப்பை மறந்து ஒன்று கூடுவோம் என்று அதிமுக தொண்டா்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த அறிக்கை குறித்து சென்னை எம்ஆர்சி நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம்,
நாங்கள் ஏதோ துரோகம் செய்துவிட்டு இயக்கத்தை பிளவுபடுத்தியதாகக் குறை சொல்கிறார். ஆனால், தான் மட்டும் இருந்தால் போதும், தனக்காகத்தாக் தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று நினைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல, தனது பொறுப்புக்கு பாதிப்பு வருகிறது என்றவுடன் கசப்பை மறந்து ஒன்று கூடுவோம் என்று அறிக்கை விடுகிறார். பேசலாம். பொதுக்குழுவைக் கூட்டுங்கள் அதில் முடிவெடுக்கலாம் என்று சி.வி. சண்முகம் கூறினார்.
இப்போது அழைக்கும் பழனிசாமி முன்பே அனைவரையும் ஒன்றிணைத்திருக்கலாமே. பேசித் தீர்க்கலாம் என்ற எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை வரவேற்கிறோம். முன்பே கட்சியினரை அரவணைத்திருந்தால் இன்று தமிழ்நாட்டின் முதல்வராகியிருப்பார்.
ஒருபுறம் பேச அழைப்பு விடுத்துவிட்டு மறுபக்கம் நிர்வாகிகளை நீக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், பேரவைத் தேர்தலில் கூட்டணி பேச வந்த தவெகவை உதாசீனப்படுத்தினார். தொடர் தோல்விகளால் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவை சந்தித்து வருகிறது. இரண்டு மக்களவைத் தேர்தல், இரண்டு பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு இடைத்தேர்தல்களில் தோல்வியை அதிமுக சந்தித்துவிட்டது.
தேர்தலில் வலிமையான கூட்டணியை அமைக்காததால் கட்சியினரை ஒன்றிணைக்க மறுத்ததால் தோல்வியை சந்தித்துள்ளது அதிமுக. பிரிந்தவர்கள் நீக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து கட்சியை வலிமையக்க வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வத்தை உறுப்பினராகக் கூட ஏற்க மறுத்தார் பழனிசாமி. இப்போது ஒன்றிணைக்க அழைப்பு விடுகிறார். முன்பே கட்சியினரை அரவணைத்திருந்தால் கே. பழனிசாமி இப்போது முதல்வராகியிருக்கலாம்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க தமிழக வெற்றிக் கழகம் பேசியது. கூட்டணி பேசிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை உதாசீனப்படுத்தினார். தவெகவுடன் கூட்டணி அமையக் கூடாது என்பதற்காக எதை எதையோ பேசி அவர்களை வெளியேற்றினார்.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தேமுதிகவை அரை சதவிகித கட்சி என்றார். தேமுதிகவை ஏளனம் செய்தார். நான் மட்டும் இருந்தால் போதும், தனக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்திருந்தார் பழனிசாமி என்று கூறியுள்ளார் சி.வி. சண்முகம்.