முகப்பு
தமிழ்நாடு

த.வெ.க.வின் முதல் எம்.பி. யார்? தீவிர ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநிலங்களவை உறுப்பினர் யார்?

கு.ப. கிருஷ்ணன், ஜோசப் சி. விஜய், சகாயம் - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் விரைவில் தமிழக வெற்றிக் கழகம் தடம் பதிக்கவுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று, முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்துள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற விஜய், பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதியை காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தவெக சார்பில் போட்டியிடுபவரே மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்.

இதன்மூலம், முதல்முறையாக மாநிலங்களவையில் தவெக கால் பதிக்கவுள்ளது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தவெக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதேபோன்று, தவெக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கு வாய்ப்பு?

தில்லியில் தவெகவின் குரலாக உறுதியுடன் செயல்படும் அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து லால்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த, மூத்த அரசியல்வாதி கு.ப. கிருஷ்ணனின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று முறை பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தமிழக அமைச்சரவையிலும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

இதனிடையே, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் போட்டியிடுவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரின் பெயரும் மாநிலங்களவை உறுப்பினருக்கான பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

தவெகவில் சகாயம் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்றது பேசுபொருளானது.

இதனிடையே, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணைந்திருக்கும் காங்கிரஸும் மாநிலங்களவை பதவி கேட்க வாய்ப்புள்ளது. ஆனால், தவெக சார்பில் ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்பவே விஜய் விரும்புவதாக கூறப்படுகிறது.

அல்லது, விஜய்க்கு மிகவும் நம்பிக்கைக்குரிய வேறு யாரையாவது அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

summary

Who will be the T.V.K.'s first Rajya sabha MP? Vijay on serious discussions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.