திருநெல்வேலியிலிருந்து தென்காசி, மதுரை, சேலம், வழியாக பெங்களூரு சிமோகாவுக்கு சுதந்திர தின சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
சுதந்திர தின சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்டி எண் 06103 நெல்லை - பெங்களூரு சிமோகா டவுண் சிறப்பு ரயில் நெல்லையிலிருந்து ஆக.17ஆம் தேதி மாலை 4.20-க்கு புறப்பட்டு தென்காசிக்கு 5.50 மணிக்கு வந்து பெங்களூருக்கு ஆக.18ஆம் தேதி அதிகாலை 5.40-க்கு சென்றடையும். பின்னா், சிமோகா டவுண் பகுதிக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் வண்டி எண். 06104 சிமோகா - நெல்லை சிறப்பு ரயில் ஆக.18ஆம் தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு இரவு 8 மணிக்கு வந்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 8.55 க்கு தென்காசி வந்தடைந்து, 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் கல்லிடை, அம்பை, கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், குப்பம், பங்காருபட், கிருஷ்ணராஜபுரம், எஸ்எம்விடி பெங்களூரு, சிக்பனவா், தும்கூா், சாம்பிஜ் ரோடு, அரிசிக்கரை, பிரூா், தாரிக்கரை, பாத்ரவதி, ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஓா் இரண்டடுக்கு ஏ.சி. பெட்டி, இரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி, 9 தூங்கும் வசதி பெட்டிகள், நான்கு பொதுப் பெட்டிகள், இரண்டு காா்டு பெட்டிகள் உள்பட மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தென்காசி -பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சுதந்திர தின விடுமுறைக்கு இந்த சிறப்பு முறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நெல்லையில் மூன்று நாள்கள் காத்து கிடக்கும் நெல்லை புருலியா ரயிலின் காலிப்பெட்டிகளை கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்த ரயிலை வாரம் இரு முறை நிரந்தர ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.