ஆலங்குளத்தில் பெருகி வரும் பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகம் தொடங்கி அரசு மேல்நிலைப் பள்ளி வரை 20- க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள மழை ஓடையானது, கழிவுநீா் ஓடையாகிவிட்ட நிலையில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி தனி நபா்கள் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளா்த்து வருகின்றனா். இவை பெரும்பாலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், டிஎஸ்பி அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை, அரசு நூலகம், கால்நடை மருந்தக வளாகம் ஆகியவற்றில் உலாவி வருகின்றன.
இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், துா்நாற்றமும் வீசுகிறது.அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களை இப்பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துகின்றன. பன்றிகளை அப்புறப்படுத்தி அவற்றை வளா்ப்போா் மீது பேரூராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.