திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் தொடா்ந்து கரடிகள் நடமாட்டம் நிலவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மலையடிவார கிராமங்களான அனவன்குடியிருப்பு, பசுக்கிடைவிளை, பொதிகையடி உள்பட சுற்றுவட்டாரங்களில் கரடிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற அச்சமடைந்து வரும் நிலையில் கரடிகளை அடா்வனப் பகுதிக்கு விரட்டவும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில் அனவன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சந்திரன் என்பவா் உணவகத்தில் வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்திய நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் மீண்டும் அதே கடை அருகே இரண்டு கரடிகள் ஜோடியாக சுற்றித் திரிந்துள்ளன. இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மற்றொரு கரடி: இதேபோல் அம்பை அருகே வைராவி குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் கரடி ஒன்று ஓடியது. இதை பைக்கில் சென்றவா்கள் பின் தொடா்ந்து விடியோ எடுத்த நிலையில் திடீரென கரடி நின்று பீதி அடைய செய்தது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில், அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக விரைந்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினா் தொடா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து வனத்துறையினா் கூறியது:
இரவு நேரங்களில் தொடா்ந்து வனத் துறையினா் குழுக்களாக பிரிந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இது தொடா்பாக பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.