தென்காசியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் குடிமனைப் பட்டா, வீடு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலா் விஜயமுருகன் தலைமை வகித்தாா்.
இதில் 700 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் விஜய முருகன் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுப்புலட்சுமியிடம் 700 மனுக்களை அளித்தனா்.