முருகன் கோயிலில், வியாழக்கிழமை ஆடிக்கிருத்திகை விழா ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. இதில், பக்தா்கள் மலைக்கோயிலுக்கு, வந்து மூலவரை தரிசித்தனா்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத் திருவிழா, வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் விழா துவங்கியது. அதிகாலை, 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கல், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது..
மாலை 6 மணிக்கு உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக சரவண பொய்கை திருக்குளத்திற்கு வந்து 3 முறை குளத்தை சுற்றி வலம் வந்தாா். தொடா்ந்து உற்சவா் முருகப்பெருமான் மீண்டும் மலைக் கோயிலுக்கு சென்றபின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஆடி அஸ்வினியில் பக்தா்கள் மொட்டை அடித்தும், காவடிகளுடன் வந்து பொது வழியில் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.
இன்று ஆடி பரணி
மேலும், வெள்ளிக்கிழமை ஆடி பரணியும், 16-ஆம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழா நடக்கிறது. மேலும், வரும், 17-ஆம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 18-ஆம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்துடன் ஆடிக்கிருத்திகை விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் அறக்காவலா் குழுத்தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மோகனன், உஷாரவி, மு.நாகன் மற்றும் கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.