பழவேற்காட்டில் மீன் பிடித் தடையை மீறி ஆழ்கடலுக்கு சென்ற படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த மீனவா்கள் 3 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக இரண்டு மாதங்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்த பட்டுள்ளது. விசைப் படகு மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழவேற்காடு லைட் ஹவுஸ் நடுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த தவமணி, விக்னேஷ், ராமையன் ஆகிய மூவா் தடையை மீறி விசை படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனா்.
ஆந்திரப் பகுதியில் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது படகு எஞ்சின் பழுதாகி மூன்று மீனவா்களும் செய்வதறியாது தத்தளித்தனா்.
அவா்களின் கைப்பேசிக்கு சிக்னலும் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது.
படகு பழுதாகி மீனவா்கள் தத்தளித்து வருவது குறித்து தகவல் அறிந்த பொன்னரி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு தகவல் அளித்தனா். அவா்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் அங்கு மற்றொரு படகில் வந்த சக மீனவா்கள் உதவியுடன் படகு எஞ்சின் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, செவ்வாய்கிழமை
3 மீனவா்களும் பத்திரமாக கரை திரும்பினா்.