தமிழகத்தில் ஊராட்சிகளில் முதல் முறையாக பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் தொடங்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பாழடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் உயிரிழந்தால், அவர்களது சடலங்களை எரியூட்டுவதற்கு பூந்தமல்லி, போரூர் ஆகிய பகுதிகளிலுள்ள எரிவாயு தகன மேடைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல கி.மீ தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை இருந்து வந்தது. இதன் காரணமாக காட்டுப்பாக்கம் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2014}ஆம் ஆண்டு காட்டுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.70 லட்சத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த எரிவாயு தகன மேடை தமிழகத்திலேயே முதன்முதலாக ஊராட்சியில் தொடங்கப்பட்ட திட்டமாகும். தொடர்ந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த எரிவாயு தகன மேடையின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த நவீன மைய எரிவாயு மேடை பயன்படுத்த மின்சாரம் தேவையில்லை.
அதற்கு மாற்றாக விறகு கட்டைகள், எல்பிஜி சிலிண்டர், பயோ கேஸ் மூலம் என 3 விதங்களில், காலநிலைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பாக 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மழைநீரால் மூழ்கி இருந்தாலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்க மற்றும் எரிக்க முடியாத நிலை இருந்தது. அப்போது இந்த நவீன எரிவாயு தகன மேடையில் வைத்து சுமார் 200}க்கும் மேற்பட்ட சடலங்கள் எரியூட்டப்பட்டன.
அதுமட்டுமின்றி கரோனா காலத்திலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இங்கு தான் எரியூட்டப்பட்டது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இயங்கி வந்த இந்த நவீன எரிவாயு தகன மேடை தற்போது பயன்பாடு இல்லாமல் குப்பைகள் கொட்டப்படும் கிடங்காக மாறி வருகிறது.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் இந்த நவீன எரிவாயு தகன மேடை புகை போக்கிக்காக 100 அடி உயரத்தில் புகை கூண்டு அமைக்கப்பட்டது. தற்போது அந்த புகை கூண்டு அப்படியே உடைந்து கிடக்கிறது.
இதனை சீரமைக்க வேண்டும் என ரூ.52 லட்சத்துக்கு திட்ட அறிக்கை கொடுத்தும் தற்போது நிதி ஒதுக்கப்படாமல் பல ஆண்டுகளாக இந்த நவீன எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் அப்படியே சிதலமடைந்து காணப்படுகிறது.
மாநிலத்திலேயே முதல் ஊராட்சியாக இந்த ஊராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அது பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்து வருவதால் காட்டுப்பாக்கம் ஊராட்சி மக்கள் மீண்டும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.