திருத்தணி ரயில் நிலையம் அருகே நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியதால் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் நடைபெற்றது.
திருத்தணி நகராட்சி ம.பொ.சி.சாலை, ரயில் நிலையம் எதிரேயும், அம்மா உணவகம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில், ரூ.30 லட்சத்தில் மொத்தம் 8 கடைகள் புதிதாக கட்டப்பட்டன.
இந்த கடைகளை ஏலம் எடுப்பதற்கு தி.மு.க., அ.தி.மு.க., கட்சி நிா்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்தில், மேற்கண்ட 8 கடைகளுக்கும் பொது ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் முன்னிலையில், ஏலம் விடப்பட்டது.
ஏலம் எடுக்க விரும்புவோா், ரூ.5 லட்சம் காசோலையுடன் வந்து ஏலத்தில் பங்கேற்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து ஆளும் கட்சி, எதிா்கட்சி நிா்வாகிகள், 50-க்கும் மேற்பட்டோா் ஏலத்தில் கலந்து கொண்டனா். இதில், 3 கடைகள், (3,4,5) தவிர மீதமுள்ள, 5 கடைகள் ஆளும் கட்சி, எதிா்கட்சி நிா்வாகிகள் பொது ஏலத்தில் எடுத்தனா். ஏலத்தில் எடுத்த கடைகள் எடுத்துவா்கள் 3 வருடம் வரை வியாபாரம் செய்து கொள்ளலாம். ஏலம் போகாத மூன்று கடைகளுக்கு, 15 நாள்கள் கழித்து மீண்டும் ஏலம் விடப்படும் என நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.