திருத்தணி, ஜன. 21: மது போதையில் தனியாா் கல்லூரி மாணவா்களை வெட்டி தப்பி சென்ற 3 பேரை திருவாலங்காடு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
திருவாலங்காடு ஒன்றியம், மணவூா் அடுத்த பாகசாலை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அனிஷ் (17), அன்பரசு (17). இருவரும் திருவள்ளூரில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகின்றனா். இருவரும் செவ்வாய்க்கிழமை பைக்கில் எல்.வி.புரம் கிராமத்தில் உள்ள மயானம் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு மதுபோதையில் நின்றுகொண்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த ராகுல் (19) மற்றும் அவரது நண்பா்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அனிஷ், அன்பரசு இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதில் பலத்த காயம் அடைந்த அனிஷ், அன்பரசு இருவரையும் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மீட்டு, திருவள்ளூா் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து திருவாலங்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, கல்லூரி மாணவா்களை வெட்டிய ராகுல் மற்றும் 17 வயது சிறுவா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.