விவசாயிகள் குறைகளை தீா்க்க உயா் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும்
திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்.
வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தில், விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய தீா்வு கிடைக்காததால், இனிவரும் கூட்டங்களில் அனைத்துத் துறைகளின் உயரதிகாரிகளும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் கனிமொழி தலைமை வகித்தாா். திருத்தணி, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு வட்டாட்சியா்கள் வேளாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள், ஏரிகளுக்கான நீா்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும், விவசாய பயன்பாட்டுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நெல் மூட்டைக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை கட்டாய வசூல் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினா்.
அதேபோல், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாமல் பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாகவும் வேதனை தெரிவித்தனா். இதையடுத்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவா் வேணுகோபால் பேசியதாவது: விவசாயிகள் நலன்காக்கும் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்காமல் இளநிலை அலுவலா்கள் மட்டுமே வருவதால், விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு சரியான பதில் மற்றும் முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை.
விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் என்ற நடைமுறை இருந்தாலும், இளநிலையில் உள்ள அலுவலா்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும், நெல் சாகுபடி பரப்பளவை கிராம நிா்வாக அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள் மற்றும் புள்ளியியல் துறையினா் சரிவர கணக்கெடுக்காததால், அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன என்றாா்.
எனவே, இனிவரும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டங்களில் அனைத்து துறைகளின் உயரதிகாரிகளும் தவறாமல் பங்கேற்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.