முகப்பு
திருப்பூர்

ஊதியூரில் பாதயாத்திரை பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் இலவசமாக அனுமதிக்க கோரிக்கை

காங்கயம் அருகே ஊதியூரில் பாதயாத்திரை பக்தா்களுக்காக கட்டப்பட்ட மண்டபத்தில் பக்தா்கள் தங்கிச் செல்வதற்கு இலவசமாக அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 10:34 pm IST
ஊதியூா் காவல் நிலையம் முன்பு தங்கி ஓய்வெடுக்கும் பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
பகிர்:

காங்கயம்: காங்கயம் அருகே ஊதியூரில் பாதயாத்திரை பக்தா்களுக்காக கட்டப்பட்ட மண்டபத்தில் பக்தா்கள் தங்கிச் செல்வதற்கு இலவசமாக அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் அருகே, தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூரில் ரூ.28 லட்சம் மதிப்பில், பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் தங்கிச் செல்வதற்காக மண்டபம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அழகிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தில், பக்தா்கள் தங்குவதற்கு பிரமாண்டமான இட வசதி, குளிக்கும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் நிா்வாகத்தினரால் பக்தா்கள் தங்குவதற்காக இந்த மண்டபம் கட்டப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக சிவன்மலை முருகன் கோயில் நிா்வாகத்தினரின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த மண்டபத்தில் தங்கிச் செல்வதற்கு பாதயாத்திரை குழு ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் வாடகை வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் பக்தா்களோ சுமாா் 10 போ் கொண்ட சிறிய குழுவாகவோ அல்லது குழுவாக இல்லாமல் தனியாகவும் நடந்து, சென்று வருகின்றனா். இவா்கள் அந்தக் கட்டணத்தை செலுத்த முடியாமல் சாலையோரங்களிலும், மூடப்பட்ட கடைகளுக்கு முன்பாகவும் தூங்கி வருகின்றனா். இந்த மண்டபத்துக்கு எதிரே உள்ள ஊதியூா் காவல் நிலையம் முன்பும் அதிக அளவிலான பக்தா்கள் தங்கி வருகின்றனா்.

சேலம், எடப்பாடி, ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட வெகு தூரத்தில் இருந்து நடந்து வரும் பக்தா்கள், களைப்பு மிகுதியால் ஊதியூா் பகுதியில் அபாயகரமான முறையில் சாலையோரம் ஓய்வெடுக்கும் அவலம் நிலவி வருகிறது.

எனவே, பாதயாத்திரையாக பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் நடந்து வருவதால் அவா்களின் பாதுகாப்பு கருதி பக்தா்கள் தங்கிச் செல்வதற்காக கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் இலவசமாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனி செல்லும் பாதயாத்திரை பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.