முகப்பு
வணிகம்

இ-வர்த்தகம் இன்னுமொரு குமுழி?

இணையதள வர்த்தகம் இன்று எங்கும், எதிலும் வேகமாகப் பரவி வருகிறது. சில செல்லிடப்பேசி மாடல்கள் இணைய வர்த்தகம் (இ-வர்த்தகம்) வழியாக மட்டுமே அறிமுகமாகி, அதில் மட்டுமே விற்பனை தொடரும் என்கிற முறையும் தற்போது நடைமுறையில் உள்ளது.

பகிர்:

இணையதள வர்த்தகம் இன்று எங்கும், எதிலும் வேகமாகப் பரவி வருகிறது. சில செல்லிடப்பேசி மாடல்கள் இணைய வர்த்தகம் (இ-வர்த்தகம்) வழியாக மட்டுமே அறிமுகமாகி, அதில் மட்டுமே விற்பனை தொடரும் என்கிற முறையும் தற்போது நடைமுறையில் உள்ளது.

பெருநகரங்களில் செல்லிடப்பேசிகளின் விற்பனை கணிசமான அளவில் இ-வர்த்தக முறையிலேயே நடைபெறுகிறது என்று கூறும் விதத்தில் நிலைமை போய்க்கொண்டிருக்கிறது.

புத்தகங்களில் தொடங்கி, ஆயத்த ஆடை, காலணிகள், மின்னணு சாதனங்கள், வீட்டுப் பொருள்கள் என பரிணாம வளர்ச்சியடைந்து பல்வேறு நுகர்வோர் பொருள்களைத் தனது வலையில் இ-வர்த்தகம் வீழ்த்தி வருகிறது.

இ-வர்த்தக முறையில் விற்பனையாகும் ஒரு பொருளை அதன் உற்பத்தியாளரே விற்கிறார் என்பது கிடையாது.

சில சாதனங்களுக்கு மட்டுமே அது போல நடைபெறுகிறது. பெரும்பாலும் விற்பனையாளருக்கும் வாங்குபவருக்கும் இடையே ஓர் ஊடகமாக மட்டுமே இ-வர்த்தகர் செயல்படுகிறார்.

இது ஏற்கெனவே பொதுவாகப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

எங்கோ ஓர் இடத்தில் உள்ள சாதனத்தை - அது ஒரு புத்தகமானாலும், ஒரு குறிப்பிட்ட மாடல் காலணியானாலும் - இந்த நாட்டில் அல்லது வெளிநாட்டில் உள்ள விற்பனையாளரிடமிருந்து வாங்க விரும்பும் வாடிக்கையாளர் - நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கொண்டு சேர்க்க உதவும் ஊடகமாக இ-வர்த்தக தளங்கள் செயல்படுகின்றன.

இணைய வழியில் விற்பனை என்பது மட்டுமல்லாமல் சேவை அளிப்பு என்கிற புதிய அம்சமும் கவனிக்கத் தக்கதாக உள்ளது. ஸ்மார்ட் ரக செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தும் வகையில் செயலிகளை உருவாக்கி அவற்றின் வழியாக சேவைகள் அளிப்பது இந்தப் புதிய முறை.

செயலி அடிப்படையில்தான் தற்போது வாடகைக் கார் சேவை பெரும்பாலும் நடைபெறுகிறது.

வாடைக் கார் சேவை செயலியை உருவாக்கும் நிறுவனம் ஓர் தொழில் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.

வாடைக் கார் சேவைக்கென புதிய கார் வாங்க வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது முதல், வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு அந்தக் கார் உரிமையாளருக்கு உதவுவது வரை அந்த செயலி நிறுவனத்தின் கட்டமைப்பு உறுதி செய்கிறது.

இவ்வளவு ஏன்? பழைய சாமான் விற்பனை, காய்கறி, ஃபார்னிச்சர் வாங்குவதற்குக்கூட நம் நாட்டில் செயலிகள் உள்ளன.

பெருநகரங்களில் வாகன நிறுத்துமிடங்களில் உங்கள் காரைக் கொண்டு நிறுத்திவிட்டு, உங்களுக்குத் தேவையானபோது, அதை மீண்டும் ஓட்டி வரும் சேவைக்கு அமெரிக்காவில் செயலி உள்ளது.

அமெரிக்காவின் பெருநகரங்களில் வாடகை முறையில் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் செயல்படுகின்றன.

பெரும் பரப்பளவில் அமைந்த வாகன நிறுத்துமிடங்களைத் தவிர பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்துமிடங்களும் நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ளன. இவற்றில் சில லாபகரமாகச் செயல்படுகின்றன. சிலவற்றுக்கு வேண்டிய அளவு வருமானம் இல்லை.

முன்யோசனையுள்ள ஒரு நபருக்கு இது பெரும் தொழில் வாய்ப்பாகத் தோன்றியது. வாகன நிறுத்துமிடங்கள் வருமானம் இல்லாமல், வாடிக் கிடக்கும் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட சாமர்த்தியசாலி, ஒரு ஸ்மார்ட்போன் செயலியை உருவாக்கினார்.

மிகவும் நெரிசலான கடை வீதிகளுக்குச் செல்லும்போது, அந்தச் செயலி மூலம் அழைப்பு விடுத்தால், உங்கள் காரை ஒருவர் வாகன நிறுத்துமிடத்துக்கு ஓட்டிச் சென்று நிறுத்திவிட்டு, உங்களுக்குத் தேவைப்படும்போது திரும்பக் கொணர்ந்து தந்துவிடுவார்.

இடத்தைத் தேடி காரை நிறுத்தும் தொல்லையும் தீர்ந்தது; நேரமும் மிச்சம்.

குறைவான வாடிக்கையாளர்களைப் பெற்று வந்த வாகன நிறுத்துமிடங்கள் கூட, இந்தச் செயலி வந்த பிறகு கணிசமான வாடிக்கையாளர்களைப் பெற்று வருகின்றன.

உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை - அது நகரின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்கள் வீட்டுக்கு கொண்டு சேர்க்க உதவும் செயலியும் அமெரிக்காவில் உள்ளது.

உணவகங்களே வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு நேரடியாக உணவு கொண்டு தருவதிலிருந்து இது மாறுபட்டது. இந்தச் செயலிகளின் செயல்பாடுகள் எல்லாமே லாபகரமாக உள்ளதா என்று கேட்டால், பொதுவாக "இல்லை' என்பதுதான் பதில். ஆனால் நீண்ட கால அடிப்படையில், வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும்போது, இவை லாபம் பெற்றுத் தரும் என்று அந்தச் செயலியை உருவாக்கியவர்கள் நம்புகிறார்கள்.

கார் இல்லாதவர்கள், அவசரத் தேவைக்கு ஆட்டோவையும் டாக்சியையும் அழைப்பது போலவே நகரின் மூலை முடுக்கிலிருந்து உணவு தருவிக்கும் செயலிகள் அமெரிக்காவில் மும்முரமாகச் செயல்படுகின்றன.

இ-வர்த்தக தளத்தில் அடங்கும் இந்த முறையானது, இந்தியாவிலும் மெல்ல மெல்லப் புகுந்து வருகிறது.

டாட்காம் குமிழி

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இணையதளம் பரவத் தொடங்கிய காலத்தில் அமெரிக்காவில் இணைய வழித் தொழில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வந்தது.

"டாட்காம் குமிழி' என்று 1995-2000 காலகட்டத்தைக் குறிப்பிடுவது வழக்கம்.

எண்ணற்ற புதிய நிறுவனங்கள் இணையதளம் வழியாகத் தொழில் நடத்தப் புறப்பட்டன. வெகு விரைவிலேயே அவற்றின் பொதுப் பங்கு வெளியீடு தொடங்கியது. முதலீடு குவிந்தது. இணையதளத் தொழில் நிறுவனப் பங்குகளின் மதிப்பு அசுர வளர்ச்சியைக் காண ஆரம்பித்தன.

தொழில்நுட்பத் துறை பங்குகளைப் பட்டியலிடும் அமெரிக்காவின் நாஸ்டாக் குறியீடு, 1995-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரையிலான கால அளவில் 5 மடங்கு அதிகரித்தது.

நம்ப முடியாத அளவுக்கு அந்த டாட்காம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்தது. ஆனாலும், அதற்கேற்ற லாபத்தை நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காட்ட இயலாததால் அந்நிறுவனங்கள் மிக வேகமாக வீழ்ச்சி அடைந்தன. சில காணாமலே போய்விட்டன.

ஆனால், டாட்காம் குமிழி காலத்தில் தோன்றி, அந்தக் குமிழி வெடித்தபோது சரிவையும் கண்ட அமேசான், இ-பே, சிஸ்கோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் இன்று மிக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த கால கட்டத்தில் இருந்ததைவிட மாபெரும் உயரங்களை இந்தக் குறிப்பிட்ட நிறுவனங்கள் அடைந்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

அந்த கால கட்டத்துக்குப் பிறகு, இணையதளம் என்பது உலகம் முழுவதும் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இன்றைய இ-வர்த்தக நிறுவனங்களில் பெரும்பாலானவை பொதுப் பங்குகளால் உருவானவை அல்ல. தனிப்பட்ட முதலீடுகளால் உருவானவை.

20 ஆண்டுகளுக்கு முந்தைய "குமிழி' சாதாரண முதலீட்டாளர்களுக்கு பலத்த அடியைக் கொடுத்தது.

இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வெளிநாடுகளில் இ-வர்த்தகம் உறுதிப்பட்டுவிட்டது.

நம் நாட்டில் இது புதிய விவகாரம். இணையதளப் பயன்பாடு, ஸ்மார்ட்போன் வகையறாக்கள் பெருநகரங்களில் மட்டுமே அதிகம் உள்ளது.

இந்த நிலையில், இ-வர்த்தக தளங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கூடிக் கொண்டே போகின்றன. தற்போதைய அளவில் இந்த நிறுவனங்களுக்கு கிடைத்து வரும் நிதி ஆதாரத்தில் பெரும் பகுதி தனியார் முதலீடும் வெளிநாட்டு முதலீடுகளும்தான்.

புதிது புதிதாக முளைக்கும் இ-வர்த்தக நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளுக்கு ஏற்ற லாபத்தை எப்போது திரும்பப் பெறும் என்று கூற முடியாது.

ஏற்கெனவே நம் நாட்டின் இ-வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி என்பதைக் கடந்த கடும் குடுமிப் பிடி சண்டை இருந்து வருகிறது.

விரைவிலேயே சீன இ-வர்த்தக நிறுவனமான அலிபாபா இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடுங்குவதாக அறிவித்துள்ளது. உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமேஸான் ஏற்கெனவே இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

சந்தையில் கணிசமாக இடம் பிடிக்க என்னென்ன உத்திகளை அவை பின்பற்றும் எனக் கூற முடியாது.

வாங்கும் பொருள்களுக்கு கிடைக்கும் மகா விலைச் சலுகைகளை இ-வர்த்தக நிறுவனங்களே ஏற்கின்றன என்பது பாரம்பரிய வர்த்தகர்கள் கூறும் புகார். இது எத்தனை காலம் நீடிக்கும்?

காய்கறி, பழம் வாங்க உதவும் செயலிகள் எத்தனை நாள் நம் நாட்டில் தாக்குப் பிடிக்கும்?

ஆனால் இப்போதைய நிலவரம் நீர்க்குமிழி அல்ல என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டில் இணையதளப் பயன்பாடு முதிர்ச்சி அடைந்துள்ளது என்றும் இ-வர்த்தக முறையில் தவறுகள் இருந்தால் திருத்தம் அடைந்து நீடித்து நிலைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அந்த கணிப்பு பலிக்குமா? காலம்தான் அதற்கு பதில் கூற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.