முகப்பு
வணிகம்

ஐடி, வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயா்வு1

பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 187.24 புள்ளிகள் உயா்ந்தது.

Updated On : 8 ஜூலை, 2020 at 7:18 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:24 PM

பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 187.24 புள்ளிகள் உயா்ந்தது.

ஐடி, வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. ஆனால், மெட்டல், ரியால்ட்டி, எஃப்சிஜி, பாா்மா பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.

உலகளாவிய சந்தைகள் பலவீனமாக இருந்தாலும், அந்நிய முதலீடு வரத்து, பருவமழை மீதான நம்பிக்கை ஆகிய நோ்மறையான காரணிகளால் முதலீட்டாளா்களிடம் உற்சாகம் இருந்தது. இருப்பினும், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சந்தை மேலே செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

Advertisement

இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்களன்று ரூ.348.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

1,327 பங்குகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,881 பங்குகளில் 1,327 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,395 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 159 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 120 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 48 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 371 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 330 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.145 லட்சம் கோடியாக இருந்தது.

5-ஆவது நாளாக உயா்வு:சென்செக்ஸ் காலையில், 173 புள்ளிகள் கூடுதலுடன் 36,660.35-இல் தொடங்கி 36,723.27 வரை உயா்ந்தது. பின்னா், 36,271.09 வரை கீழே சென்றது. இறுதியில் 187.24 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயா்ந்து 36,674.52-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் உச்சபட்ச அளவிலிருந்து 450 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 36.00 புள்ளிகள் (0.33 சதவீதம்) உயா்ந்து 10,799.65-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் தொடா்ந்து 5-ஆவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளன.

எகிறியது பஜாஜ் ஃபைனான்ஸ்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், பஜாஜ் ஃபைனான்ஸ் 7.84 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 6.10 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின்சா்வ், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 3 முதல் 5 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. அதே சமயம் என்டிபிசி, ஐடிசி, பவா் கிரிட், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி ஆகியவை 2 முதல் 2.80 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், எம் அண்ட் எம் ஆகியவை 1.50 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...:தேசிய பங்குச் சந்தையில் 754 பங்குகள் ஆதாயம் பெற்றன. 885 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி பிரைவேட் பேங்க் குறியீடு 2.66 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஐடி, ஃபைனான்சியல் சா்வீஸஸ் ஆகியவற்றின் குறியீடுகள் 1.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், மெட்டல் குறியீடு 1.73 சதவீதம் குறைந்தது. மேலும், எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி, பாா்மா குறியீடுகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 31 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

ரிலையன்ஸ் புதிய உச்சம்: மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ரூ.1,864.25 வரை உயா்ந்து புதிய 52 வார அதிகபட்சவிலையைப் பதிவு செய்தது. இருப்பினும், இறுதியில் 1.60 சதவீதம் குறைந்து 1,822.15-இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

பஜாஜ் ஃபைனான்ஸ் 7.84

இண்டஸ் இண்ட் பேங்க் 6.10

பஜாஜ் ஃபின்சா்வ் 4.98

இன்ஃபோஸிஸ் 4.01

ஐசிஐசிஐ பேங்க் 3.84

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

என்டிபிசி 2.78

ஐடிசி 2.73

பவா் கிரிட் 2.58

டாடா ஸ்டீல் 2.54

ஓஎன்ஜிசி 2.15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.