வணிகம்

முடங்கிய பேக்கரிகளால் ரூ.200 கோடி வர்த்தக இழப்பு

பொதுமுடக்கம் காரணமாக சுமார் இரண்டு மாத காலம் பேக்கரிகள் மூடப்பட்டதால், உணவுப் பொருள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்கள் ரூ.200 கோடி வர்த்தகத்தை இழந்துள்ளன. 

கே.விஜயபாஸ்கா்


பொதுமுடக்கம் காரணமாக சுமார் இரண்டு மாத காலம் பேக்கரிகள் மூடப்பட்டதால், உணவுப் பொருள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்கள் ரூ.200 கோடி வர்த்தகத்தை இழந்துள்ளன. 

பிரட், கேக், பிஸ்கெட், இனிப்புகள், கார வகைகள் என பேக்கரிகளில் உள்ள 90 சதவீத உணவுப் பொருள்கள் வெளி இடங்களில் தயாரிக்கப்பட்டுதான் கொண்டுவரப்படுகின்றன.  தமிழகத்தில் இத்தகைய உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் மையமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. இதற்கு காரணம் ஈரோடு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள பேக்கரிகள்தான். ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், மாவட்ட எல்லைகளில் மட்டும் சுமார் 5,000 பேக்கரிகள் உள்ளன.  

ரூ. 2 கோடி வரை முதலீடு:  இதில் சுமார் 3,000 பேக்கரிகள் மாதம் சராசரியாக ரூ.1 லட்சம் வரையிலும், 2,000 பேக்கரிகள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் உணவுப் பொருள்களை கொள்முதல் செய்கின்றன. சராசரியாக ஒவ்வொரு பேக்கரியும் மாதம் ரூ.2 லட்சம் வரை உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்கின்றன.  அதன்படி பேக்கரிகள் மூலம் மாதம் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.  இதனால்தான் ஈரோடு மாவட்டத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான முதலீட்டில் ஏறத்தாழ 1,200-க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனையாளர்கள் ஆதிக்கம்: கரோனா பொது முடக்கம் காரணமாக பேக்கரிகள் மூடப்பட்டதால், உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு மாதங்களில் ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகத்தை இழந்துள்ளன என்கிறார் ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) உதவித் தலைவர் பி.திருமூர்த்தி. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 

உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் மொத்த விற்பனையாளர் மூலமாகவே வியாபாரம் செய்கின்றன. கரோனா பொதுமுடக்க அறிவிப்புக்கு 10 முதல் 20 நாள்களுக்கு முன்பு மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பிய உணவுப் பொருள்கள் தேக்கம் அடைந்தன. இரண்டு மாதங்களுக்கு பிறகு பேக்கரிகள் திறக்கப்பட்ட நிலையில், அந்தப் பொருள்கள் பழையதாகிவிட்டன என சில்லறை விற்பனைக்கு அனுப்பாமல் நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் இந்த உணவுப் பொருள்களைக் கொட்டி அழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

தொகையை திரும்பப் பெற முடியாத நிலை: மேலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உணவுப் பொருள்களை அனுப்பிய நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களிடம்  அதற்குரிய தொகையைப் பெற முடியாத நிலையில் 
உள்ளன. 

பேக்கரிகளிடம் இருந்து தங்களுக்குப் பணம் வரவில்லை எனக்கூறி நிலுவைத் தொகையை மொத்த வியாபாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். ஏற்கெனவே நிலுவை இருந்தாலும், கடந்த 15 நாள்களாக உற்பத்தி தொடங்கிவிட்ட நிலையில் வேறு வழி இல்லாமல் உணவுப் பொருள்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். 

இதனால், உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது மிகப்பெரிய நிதிச் சிக்கலில் சிக்கியுள்ளன.  கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் உணவுப் பொருள் தயாரிப்பு தொழிலில் ஏறத்தாழ 800 புதிய தொழில் முனைவோர் உருவாகியுள்ளனர்.  ரூ.25 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வங்கிக் கடன் பெற்று தொழில் செய்து வந்த தொழில்முனைவோர் தற்போது வர்த்தக இழப்பு,  நிலுவைத் தொகை வசூலாகாதது, கடன் தவணை போன்ற பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொழிலை நடத்த முடியாத நிலை: இதனால் 200-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

ஜவுளி, மஞ்சள் போன்றவற்றால் புகழ்பெற்ற ஈரோடு மாவட்டம் தற்போது உணவுப் பொருள்கள் வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. பாரம்பரிய ஊட்டி வர்க்கியை கூட ஈரோட்டில் உள்ள நிறுவனங்கள் உற்பத்தி செய்து நீலகிரி மாவட்டத்துக்கு விற்பனைக்கு அனுப்புகின்றன.  

இதுபோன்று இங்குள்ள பால் பொருள்கள், பிரட், கேக் வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்கள் முழுவதும் தங்களது தயாரிப்புகளை விற்பனைக்கு அனுப்புகின்றன.

20 சதவீதம் அளவுக்குகூட வியாபாரம் இல்லை: வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த இத்தகைய நிறுவனங்கள் கரோனா பாதிப்பு காரணமாக கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளன. இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பேக்கரிகள் திறக்கப்பட்டுள்ள போதிலும், 20 சதவீதம் அளவுக்கு கூட வியாபாரம் இல்லை. இதனால் உற்பத்தியும் பெருமளவு குறைந்துள்ளது. இப்போதுள்ள நிலையில் இந்த ஆண்டில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை. 

இதனால் சிறு, குறு உணவுப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களைப் பாதுகாக்க மானியம், வட்டியில்லா கடன் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். 

இந்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம்,  மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவிக்க வேண்டும்.  இந்த கோரிக்கைகள் குறித்து ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், சேலம் எம்.பி.க்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT